Womens T20 Worldcup Final: மகளிர்  டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து (SA Vs NZ W) அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி:


ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 அணிகளுடன் தொடங்கிய, ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் அரையிறுதிச் சுற்றுகளின் முடிவில், தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய தலா 5 போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை கண்டுள்ளது. இரு அணிகளும் லீக் சுற்றின் பிரிவில் தங்களது குழுவில் இரண்டாவது இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


தென்னாப்ரிக்கா Vs நியூசிலாந்து


தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணி மோத உள்ள இறுதிப்போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.  இந்த இரு அணிகளுமே இதுவரை மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. இதன் காரணமாக, இரு அணிகளில் டி20 உலகக் கோப்பையை முதல்முறையாக வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கோப்பயை இழந்தது நினைவுகூறத்தக்கது.


பலம், பலவீனங்கள்:


தென்னாப்பிரிக்கா அணி இலக்கை சேஸ் செய்யும்போது ஆதிக்கம் செலுத்துகிறது. அதே நேரத்தில் இந்த ஆண்டு எடிஷன் பற்றி பேசும்போது நியூசிலாந்து அணியின் நிலை நேர்மாறாக உள்ளது. அரையிறுதிப் போட்டியில் மிக சிறிய இலக்கை கொண்டு, மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது. சுழல்பந்து வீச்சு மற்றும் அணியாக சேர்ந்து போராடுவது நியூசிலாந்தின் முக்கிய பலமாக உள்ளது. இந்த முறை புதிய வெற்றியாளர் உறுதி செய்யப்படுவார் என்பதால், நடுநிலையாளர்களுக்கு கூட இது ஒரு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும். நியூசிலாந்து அணி மீண்டும் தங்களை ஒருங்கிணைத்து போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ள ஒரு நாள் மட்டுமே இருந்தது. எனவே அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.


நேருக்கு நேர்:


இரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், நியூசிலாந்து மகளிர் அணி 11 முறையும், தென்னாப்ரிக்கா மகளிர் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.


மைதானம் எப்படி?


துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என, இருதரப்புக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. இதனால், இன்றைய போட்டி சமநிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகள சூழல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும், முக்கியமாக ஆட்டம் முன்னேறும்போது ஆடுகளத்தின் மந்தநிலை காரணமாக, பேட்ஸ்மேன்கள் சிரமப்படலாம்.


உத்தேச அணி நிலவரம்:


தென்னாப்ரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், மரிசான் கேப், சுனே லூஸ், க்ளோ ட்ரையோன், நாடின் டி கிளர்க், அன்னேரி டெர்க்சன், சினாலோ ஜாஃப்டா, நோன்குலுலேகோ மலாபா, அயபோங்கா காக்கா. 


நியூசிலாந்து: சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிலிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ்.