WTC 2025 Points Table Updated: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது தோல்வியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான இந்தியாவின் வாய்ப்பு சரிந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்

தொடர் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் மேலும் குறைந்துள்ளது. ஏற்கனவே மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, 55 சதவிகித வெற்றி விகிதத்தை கொண்டிருந்தது. தற்போது அது, 52.77 சதவிகிதமாக சரிந்துள்ளது. அதேநேரம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்ரிக்கா ஏற்கனவே முன்னேறியுள்ளது. இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியுற்றதால், இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரம், இந்த வெற்றியால் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த அணியின் வெற்றி விகிதம் 58 சதவிகிதத்திலிருந்து 61.45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:

நிலை
அணி
போட்டிகள்
மொத்த புள்ளிகள்
பெற்ற
புள்ளிகள்
PCT
விளையாடியது வெற்றி தோல்வி டிரா
1 தென்னாப்பிரிக்கா (Q) 11 7 3 1 132 88 66.67
2 ஆஸ்திரேலியா 16 10 4 2 192 118 61.45
3 இந்தியா 18 9 7 2 216 114 52.77
4 நியூசிலாந்து 14 7 7 0 168 81 48.21
5 இலங்கை 11 5 6 0 132 60 45.45
6 இங்கிலாந்து 22 11 10 1 264 114 43.18
7 வங்கதேசம் 12 4 8 0 144 45 31.25
8 பாகிஸ்தான் 11 4 7 0 132 40 30.30
9 வெஸ்ட் இண்டீஸ் ( 11 2 7 2 132 32 24.24

ஆஸ்திரேலிய அணி முன்னிலை:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி சமனில் முடிந்ததால் தொடர் சமனில் தொடர்ந்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 3ம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே, 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் தொடரை இழக்கவில்லை என்ற சாதனையை தொடர முடியும். அதோடு, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவின் அடிப்படையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல நூலிழை வாய்ப்பும் தொடரும்.