IND vs AUS 3rd Test:  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.  ஒரு விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை ஆஸ்திரேலிய அணி எட்டியது. 


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் என அழைக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி வந்தனர். இதனால் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை.  அனைத்து விக்கெட்டுகளும் சீட்டுகட்டு போல் சரியத் தொடங்கியதால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் குஹ்னமென் 5 விக்கெட்டுகாளும் நாதன் லைன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தனர். 


அதன் பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு  தடுமாறினாலும் இந்திய அணியை விடவும் அதிக ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் தங்களது கரங்களை வலுப்படுத்திக் கொண்டனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் முன்னைலை வகித்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 


அதன் பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய் அணிக்கு முதல் இன்னிங்ஸ் போலவே அதிர்ச்சி காத்து இருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் சார்பில் நாதன் லைன் இந்த இன்னிங்ஸில் மட்டும் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இந்த இன்னிங்ஸில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் புஜாரா மட்டும் 142 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உள்பட 59 ரன்கள் சேர்த்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. முதல் இரண்டு நாளில் மட்டும் 30 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. 


மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலெயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அதன் பின்னர் அதிரடியாக ஆடிய அஸ்திரேலிய அணி வீரர்கள் வெற்றி இலக்கை எளிதில் எட்டினர். இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில்  தனது வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளனர்.