WTC Final 2023: இன்னும் ஓரிரு நாளில் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. வேகப்பந்து வீச்சாளர் ஹோசில் வுட் மட்டும் காயம் காரணமாக தற்போது விலகியுள்ளார். மற்றபடி அனுபவமிக்க மூத்த வீரர்கள், இக்கட்டான நிலையில் அதிரடி காட்டக்கூடிய இளம் வீரர்கள் என அந்த அணி சிறப்பான நிலையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் களமிறங்கும் ப்ளேயிங் லெவனை முடிவு செய்ததா இல்லையா எனும் கேள்வி ரசிகர்களுக்கு இன்னும் இருக்கிறது. இந்திய அணியின் அனுபவம் மிக்க வீரர்களான பும்ரா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் என அனைவரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி ஒரு கலவையான அணியுடன் தான் லண்டனுக்குச் சென்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி இதுவரை உள்ளது. 


இந்நிலையில், இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் தனது யுட்டூப் சேனலில், இந்திய அணி உலக் டெஸ்ட் சாம்பியன் ஷிப்புக்கு விக்கெட் கீப்பராக கே.எஸ் பரத்தை களமிறக்கும் திட்டத்தை விட இஷான் கிஷன் சரியான தேர்வாக இருப்பார் என நினைக்கிறேன். இஷான் கிஷனால் ரிஷப் பண்ட் போல், அதிரடியாக ரன்கள் குவிக்க முடியும். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பினையும் அவர் மும்பை அணிக்கு வழங்கியுள்ளார். இதனால் இந்த நம்பிக்கை அவருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவும் என நம்புகிறேன் என கூறியுள்ளார். 


ஹர்பஜன் சிங் இவ்வாறு கூறியிருந்தாலும், இஷான்கிஷானுடன் ஒப்பிடுகையில் கே.எஸ்.பரத் முதல் தர போட்டியில் திறம்படவே ஆடியுள்ளார். இதுவரை 90 இன்னிங்சில் ஆடியுள்ள பரத் 4 ஆயிரத்து 808 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 9 சதங்களும், 27 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 308 ரன்களை எடுத்துள்ளார்.


29 வயதான கே.எஸ்.பரத் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். மொத்தம் 101 ரன்களை எடுத்துள்ள பரத் அதிகபட்சமாக 44 ரன்களை விளாசியுள்ளார். விக்கெட் கீப்பிங்கிலும் இதுவரை தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே ஆடியுள்ளார். பெரியளவில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஸ்கோர் குவிக்காவிட்டாலும் 6வது அல்லது 7வது வீரராக களமிறங்கிய அனுபவம் பரத்திற்கு உண்டு. இஷான்கிஷான் அளவிற்கு அதிரடி வீரராக இல்லாவிட்டாலும் மிக நேர்த்தியான பேட்ஸ்மேனாகவே பரத் உள்ளார்.


முதல் தர ஆட்டங்களை வைத்து ஒப்பிடும்போது இஷான்கிஷானை காட்டிலும் பரத் சிறப்பாக ஆடியுள்ளார். ஆனாலும், இங்கிலாந்து மண்ணில் திறம்பட செயல்பட வாய்ப்பு கிடைக்கப்போவது யாருக்கு? என்பதை நாளை மறுநாள் பார்க்கலாம்.