Rohit Sharma: உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்குவாரா என்ற அச்சம் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.  பயிற்சியில் ஈடுபட்டபோது அவரக்கு இடது கட்டை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேறினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் இவர் நாளை நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் இந்திய அணியை தொற்றியுள்ளது எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். அதாவது, பும்ரா காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், ரிஷப் பண்ட் கார் விபத்தினாலும், கே.எல். ராகுல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் இந்திய அணி மாற்று வீரர்களுடன் லண்டனில் முகாமிட்டிருந்தாலும், இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் யாரெல்லாம் இருப்பார்கள் என்ற சந்தேகம் இப்போது வரை இந்திய அணி ரசிகர்களுக்கு உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது மட்டும் இல்லாமல் பயிற்சியில் இருந்தும் வெளியேறினார். இந்நிலையில் இதுவும் இந்திய அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  


ரோகித்சர்மா:


 இந்திய கேப்டன் ரோகித்சர்மா இதுவரை ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பைகளுக்காக 5 முறை இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ளார்.


2007 டி20 உலககோப்பை:


2007ம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் முதன்முறையாக ரோகித்சர்மா சாம்பியன் கோப்பை ஒன்றிற்கான இறுதிப்போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் 16 பந்தில் 30 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.


2013 சாம்பியன்ஸ் டிராபி:


மினி உலககோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபிக்காக 2013ம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் களமிறங்கிய ரோகித்சர்மா 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


2014 டி20 உலககோப்பை:


டி20 உலககோப்பையை 2வது முறையாக கைப்பற்றும் வாய்ப்பிற்காக இந்தியா 2014ம் ஆண்டு இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதியது. அந்த போட்டியில் ரோகித்சர்மா 26 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே ரோகித் எடுத்தார்.


2015 சாம்பியன்ஸ் டிராபி:


சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதற்காக 2015ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்சர்மா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021:


கடந்த 2021ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 34 ரன்களும், 2வது இன்னிங்சில் 30 ரன்களும் ரோகித்சர்மா எடுத்தார்.


மேற்கண்ட போட்டிகளில் இந்திய அணி 2007 டி20 உலககோப்பையும், 2013 சாம்பியன் டிராபியையும் கைப்பற்றியது. மற்ற ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியையே தழுவியது.


36 வயதான ரோகித்சர்மா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 1 இரட்டை சதம், 14 அரைசதங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 3379 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மாவின் பேட்டிங் சமீபகாலமாக கவலைக்குரிய வகையிலே உள்ளது. களத்தில் சிறிது நேரம் நின்றாலே ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட ரோகித்சர்மா நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் பெரியளவில் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், குவாலிபயர் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் தோல்வியை தழுவி அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது.