மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் வதோராவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியுடன் ஆர்சிபி அணி மோதியது. டாஸ் வென்ற ஸ்மிரிதி மந்தனா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பெத்மூனி அரைசதம்:
அவரது பந்துவீச்சு தேர்வுக்கு பலன் அளிக்கும் விதமாக லாரா 6 ரன்னிலும், ஹேமலதா 4 ரன்னிற்கும் அவுட்டானர். ஆனாலும், தாெடக்க வீராங்கனை பெத்மூனி தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அவருக்கு கேப்டன் கார்ட்னர் ஒத்துழைப்பு அளித்தார். பவுண்டரிகளாக விளாசிய பெத்மூனி அரைசதம் கடந்தார்.
கார்ட்னர் ருத்ரதாண்டவம்:
அரைசதம் விளாசிய சில நிமிடங்களில் பெத்மூனி ப்ரேமாவின் பந்துவீச்சில் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 56 ரன்களுக்கு அவுட்டானார். 11.4 ஓவர்களில் 85 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த குஜராத் அணிக்காக கேப்டன் ஆஷ்லே கார்டனர் ருத்ரதாண்டம் ஆடத்தொடங்கினார்.
ப்ரேமா வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை விளாசினார். அவருக்கு மறுமுனையில் தியோந்த்ரா டோட்டின் ஒத்துழைப்பு அளித்தார். அவரும் பவுண்டரி, சிக்ஸர் விளாச ஆஷ்லே கார்ட்னர் குஜராத்தின் ரன்னை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.
202 ரன்கள் டார்கெட்:
தனி ஆளாக ருத்ரதாண்டவம் ஆடிய ஆஷ்லே மின்னல் வேகத்தில் அரைசதம் கடந்தார். இதனால், தத்தளித்துக்க கொண்டிருந்த குஜராத் அணி 150 ரன்களை கடந்தது. அரைதசம் கடந்தும் ஆஷ்லே கார்டனர் தனது சிக்ஸர் மழையை நிறுத்தவில்லை. குறிப்பாக, ஜோஷிதா, ஜார்ஜியா பந்தில் ரன்மழை பொழிந்தார். இதனால், குஜராத்தின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 201 ரன்களை எடுத்தது. கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் கடைசி வரை அவுட்டாகாமல் 38 பநதுகளில் 3 பவுண்டரி 8 சிக்ஸருடன் 79 ரன்னுடன் களத்தில் இருந்தார். முதல் போட்டியிலே இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி வெற்றி பெறுமா? என்று அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
வாரி வழங்கிய பவுலர்கள்:
ஆர்சிபி அணிக்காக ரேணுகா சிங் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 2 விக்கெட் வீழ்த்தினார். கனிகா 3 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி கட்டுக்கோப்பாக பந்துவீசினார். ஜோஷிதா 3 ஓவர்களில் 43 ரன்களையும், ஜார்ஜியா 3 ஓவர்களில் 50 ரன்களையும் வாரி வழங்கினர்.