PAK vs NZ: மிரட்டிய சான்ட்னர்! காப்பாற்றிய ரிஸ்வான் - சல்மான்! பாகிஸ்தானை வீழ்த்துமா நியூசி?
PAK vs NZ: பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் முத்தரப்பு தொடருக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு பாகிஸ்தான் அணி 243 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

PAK vs NZ: பாகிஸ்தான் நாட்டில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்ற நிலையில் இன்று கராச்சியில் நடக்கும் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையேயான இறுதிப்போட்டி நடந்து வருகிறது.
தொடர்ந்த சொதப்பும் பாபர் அசாம்:
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்காக பகர் ஜமான் - பாபர் அசாம் பேட்டிங்கைத் தொடங்கினர். ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலே பகர் ஜமான் 10 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய சவுத் ஷகீலும் 8 ரன்களுக்கு அவுட்டானார்.
அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பாபர் அசாம் நிதானமாக ஆடிய நிலையில் அவரை நாதன் ஸ்மித் காலி செய்தார். அவரது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பாபர் அசாம் அவுட்டானார். அவர் 34 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு அவுட்டானார்.
காப்பாற்றிய ரிஸ்வான் - சல்மான்:
54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்த நிலையில், கேப்டன் முகமது ரிஸ்வான் - சல்மான் அகா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். பொறுப்புடன் ஆடி இருவரும் அணியை 100 ரன்களை கடக்க வைத்தனர். பொறுப்பாக ஆடிய கேப்டன் ரிஸ்வான் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 46 ரன்னில் அவுட்டானார். அவர் 76 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்தார்.
டார்கெட்:
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மறுமுனையில் சிறப்பாக ஆடிய சல்மானும் அவுட்டானார். அவர் 65 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த தையப் தாஹிர் அதிரடியாக ஆடினார். அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்தார். அவர் அதிரடி காட்டிக் கொண்டிருந்த நேரத்தில் ஜேக்கப் டுஃபி பந்தில் அவுட்டானார். கடைசியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.3 ஓவர்களில் 242 ரன்களை எடுத்தது. கடைசியல் அஷ்ரப் 22 ரன்களும், நசீம்ஷா 19 ரன்களும் எடுத்தனர். அதிகபட்சமாக வில்லியம் ஓரோர்கி 9.3 ஓவர்களில் 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
சாம்பியன்ஸ் டிராபி:
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி ஆடும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகும். இந்த தொடர் முழுவதும் பாபர் அசாம் பெரியளவில் சிறப்பாக ஆடவில்லை. அவர் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.
மிரட்டிய சான்ட்னர்:
நியூசிலாந்து அணிக்காக கேப்டன் சான்ட்னர் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அவர் 10 ஓவர்களில் 1 ஓவரை மெய்டன் செய்து 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக ப்ரேஸ்வெல் 10 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மைதானத்தில் பந்து நன்றாக சுழன்றது.
பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.