WPL Auction 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 எடிஷனுக்கான ஏலத்தில் தமிழக ஆல்-ரவுண்டர், கமாலினி மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன கமாலினி..!
மகளிர் பிரீமியர் லீக் 2025 எடிஷனில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான மினி ஏலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. 19 வீராங்கனைகளுக்கான இடங்களுக்கு 90 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் நடந்து முடிந்த ஏலத்தில், தமிழக ஆல்-ரவுண்டர் ஜி கமாலினியை மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அவரது அடிப்படை விலை ரூ. 10 லட்சத்தில் தொடங்கிய நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடுமையாக போட்டியிட்டன. இதனால் கமாலினியின் ஏலத்தொகை கிடுகிடுவென உயர்ந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு தமிழக ஆல்-ரவுண்டரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம், மகளிர் பிரீமியர் லீகில் இளம் வயதில் ஒரு கோடிக்கும் அதிகமான விலையில் ஏலம் எடுக்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
யார் இந்த கமாலினி?
கமலினி உள்நாட்டுப் போட்டிகளில் தனது அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, ஏலத்தின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்தார்.
16 வயதான கமாலினி U19 மகளிர் டி20 டிராபியில் எட்டு ஆட்டங்களில் 311 ரன்களுடன் இரண்டாவது டாப் ஸ்கோரராக இருந்தார். அண்மையில் அக்டோபரில் நடந்த உள்நாட்டு தொடரில் தமிழ்நாடு பட்டத்தை வெல்ல உதவினார். அவரது சிக்ஸர் அடிக்கும் திறன் கவனத்தை ஈர்க்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இடது கை பேட்டர் மொத்தமாக 10 சிக்சர்களை விளாசினார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான U-19 முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 'B'க்காக அவர் அற்புதமாக விளையாடி 79 ரன்கள் எடுத்தார். இது மலேசியாவில் நடந்த U-19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு தகுதியான இடத்தைப் பெற்றது.
கடந்த 2008ம் ஆண்டு மதுரையில் பிறந்த கமாலினி கிரிக்கெட் பயிற்சிக்காக குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அவரது தந்தை குணாளன் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் அபாரமான ஃபார்ம்:
முன்னதாக நேற்று, U-19 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கமலினி 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். கமாலினி ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராகவும் திகழ்கிறார். 16 வயதான கமாலினி தற்போது சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீராங்கானைகள்:
- டியான்ட்ரா டோட்டின் – ரூ. 1.70 கோடி (குஜராத் ஜெயண்ட்ஸ்)
- ஜி கமாலினி – ரூ. 1.60 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
- நாடின் டி கிளர்க் – ரூ. 30 லட்சம் (மும்பை இந்தியன்ஸ்)
- சிம்ரன் ஷேக் – ரூ. 1.90 கோடி (குஜராத் ஜயண்ட்ஸ்)
- நந்தினி காஷ்யப் - ரூ 10 லட்சம் (டெல்லி கேபிடல்ஸ்)
- என் சரணி - ரூ 55 லட்சம் (டெல்லி கேபிடல்ஸ்)
- பிரேமா ராவத் - ரூ 1.20 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)