உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் பும்ரா. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியும் உள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆடி வருகிறது.
ஆஸ்திரேலியாவை காலி செய்த பும்ரா:
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் – டிராவிஸ் ஹெட் சதத்தால் ஆஸ்திரேலியா வலுவான நிலையை எட்டியது. ஆனாலும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பும்ரா சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
தொடக்க வீரர்களான கவாஜா, மெக்ஸ்வீனியை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்த பும்ரா, அபாயகரமான வீரரான லபுஷேனேவை 12 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர், இந்திய அணிக்கு மிகப்பெரிய குடைச்சல் தந்த ஸ்டீவ் ஸ்மித் – டிராவிஸ் ஹெட் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் பலமாகிய கவாஜா, மெக்ஸ்வீனி, லபுஷேனே, ஸ்டீவ் ஸ்மித், ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டார்க் என 6 பேரை அவுட்டாக்கினார்.
ஆஸ்திரேலிய மண்ணில் மட்டும் 50 விக்கெட்டுகள்:
31 வயதான பும்ரா இதுவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர்களது சொந்த மண்ணிலே 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கை அவர் அவுட்டாக்கியபோது ஆஸ்திரேலிய மண்ணில் தனது 50வது விக்கெட்டை அவர் வீழ்த்தினார். அதாவது ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது பந்துவீச்சு சராசரி 17.82 ஆக உள்ளது.
பந்து வீச்சாளராக மட்டுமின்றி கேப்டனாகவும் பும்ரா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரோகித் சர்மா இல்லாமல் நடந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை தலைமை தாங்கி வெற்றி பெற வைத்தார். ரோகித் சர்மாவிற்கு இந்திய அணியின் கேப்டனாக பும்ராவே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் 38 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து மண்ணில் 37 விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தியுள்ளார்.
முதல் விக்கெட்டை இழந்த இந்தியா:
பும்ரா இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 185 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டை கைப்பற்றி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததே சிறந்த பந்துவீச்சாக உள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதவிர 89 ஒருநாள் போட்டிகளில் ஆடி 149 விக்கெட்டுகளையும், 70 டி20 போட்டிகளில் ஆடி 89 விக்கெட்டுகளையும், 133 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி தற்போது ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்து ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வருகிறது.