WPL 2024 MI vs GG: மகளிர் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஹர்மன் ப்ரீத் கவுர் ஒரே ஓவரில் 24 ரன்கள் விளாசினார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடர்:
பிசிசிஐ சார்பில் மகளிருக்கான இரண்டாவது பிரீமியர் லீக் தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார் என்ற பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
குஜராத் அணி அதிரடி பேட்டிங்:
போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தயாளன் ஹேமலதா 40 பந்துகளில் 74 ரன்களையும், கேப்டன் பெத் மூனி 35 பந்துகளில் 66 ரன்களையும் குவித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில், குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில், சைகா இஷாக் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
நிதானம் காட்டிய மும்பை:
கடினமான இலக்கை நோக்கிய களமிறங்கிய மும்பை, தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹேலி மேத்யூஸ் 18 ரன்களிலும், நாட் ஸ்கைவர் ப்ரண்ட் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், யாஸ்திகா பாட்டியா உடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட்டியா 49 ரன்கள் சேர்ந்து ஆட்டமிழந்தார். இதனால், 98 ரன்களை சேர்ப்பதற்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்மன் பிரீத் கவுர்:
தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன், தான் எதிர்கொண்ட முதல் 21 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே சேர்த்தார். 16 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 24 பந்துகளில் 65 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹர்மன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை குஜராத் அணி தவறவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 17வது ஓவரில் பிரமாண்ட சிக்சரை விளாசி அணியின் ஸ்கோரை 144 ஆக உயர்த்தினார். 33 பந்துகளில் அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். 18வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 24 ரன்களை சேர்த்து அசத்தினார். ஹர்மன் ப்ரிதை கட்டுப்படுத்த முடியாமல், குஜராத் அணி திணறியது. 19வது ஓவர் மற்றும் 20வது ஓவர்களில் தலா ஒரு சிக்சர் விளாசினார். இதன் மூலம், 19.5 ஓவர்கள் முடிவில், ஒரு பந்து மீதமிருக்கும்போது, மும்பை அணி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹர்மன் ப்ரீத் இறுதி வரை ஆட்டமிழக்காமல், 48 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 95 ரன்களை குவித்தார். தான் எதிர்கொண்ட கடைசி 27 பந்துகளில், ஹர்மன் 75 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
பிளே-ஆஃபில் மும்பை:
குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம், நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில், மும்பை அணி 5 வெற்றிகளை பதிவு செய்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனும் மும்பை அணி தான் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிப்பட்டியலில் டெல்லி, பெங்களூரு, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.