பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், உ.பி வாரியஸ் அணியும் எலிமினேட்டர் சுற்றில் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டியானது மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் மும்பை அணியின் தொடக்க வீரர்கனைகளாக யஸ்திகா மற்றும் ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். போட்டியின் முதல் பந்தே பவுண்டரியுடன் தொடங்கிய யஸ்திகா, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அவரது உறுதுணையாக மேத்யூஸும் அவ்வபோது பவுண்டரிகளை விரட்டினார்.
அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விரட்டிய யஸ்திகா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அஞ்சலி வீசிய 5 வது ஓவரில் கிரணிடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து, 26 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஹெய்லி மேத்யூஸும் வெளியேற, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார்.
அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவுர் 14 ரன்களுடன் நடையைக்கட்ட, நாட் ஸ்கிவர்-பிரண்ட் உபி வாரியர்ஸின் பந்துவீச்சாளர்களை எல்லைக்கு விரட்ட தொடங்கினார். தொடர்ந்து அரைசதம் அடிக்க 17 ஓவர்களில் மும்பை அணி 120 ரன்களை தொட்டது. இவருடன் இணைந்த அமெலியா கெரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை அணி ஸ்கோர் எகிற தொடங்கியது.
5 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்த அமெலியா எக்லெஸ்டோன் பந்தில் அஞ்சலியிடம் கேட்சானார். கடைசி ஓவரில் களமிறங்கிய வஸ்தகர் தலா ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடிக்க, தன் பங்கிற்கு நாட் ஸ்கிவர்-பிரண்ட்டும் ஒரு சிக்ஸருடன் போட்டியை முடித்தார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. மும்பை அணியை சேர்ந்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் 72 ரன்களுடனும், வஸ்தகர் 11 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.