கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து மகுடம் சூடியது.


கடந்த 2010ஆம் ஆண்டு, பால் காலிங்வுட் தலைமையிலான அணி வெற்றிபெற்றதற்கு பிறகு, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின்னர், டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றது. 2022 டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 'சுட்டி குழந்தை' என்று அன்புடன் அழைக்கப்படும் சாம் கரன் சிறப்பாக பந்து வீசி, பாகிஸ்தான் அணியை 137 ரன்களுக்கு சுருட்டினார். 50 ஓவர் உலக கோப்பையையும் டி20 உலக கோப்பையையும் ஒரே காலகட்டத்தில் வென்ற அணி இங்கிலாந்துதான்.


பேட்டிங் செய்து அசத்திய ரிஷி:


இந்நிலையில், டி20 உலக கோப்பை வென்ற அணி வீரர்கள், சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துள்ளனர். அப்போது, ரிஷி சுனக் பேட்டிங் செய்ய, சாம் கரனும் கிறிஸ் ஜோர்டனும் பந்து வீசிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோர்ட் சூட்டுடன் சாம் கரனும் கிறிஸ் ஜோர்டனும் பந்து வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், சாம்கரன் வீசிய பந்தை ரிஷி சுனக் மிஸ் செய்வதும் ஜோர்டான் வீசிய பந்து ரிஷி சுனக்கின் பேட்டில் பட்டு அதை விக்கெட் கீப்பர் பிடிப்பதும் பதிவாகியுவள்ளது.


ரிஷி சுனக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜோர்டான் துள்ளி குதிப்பதும் அதில் பதிவாகியுள்ளது. பேட்டிங்கில் கலக்கிய ரிஷி சுனக், பந்துவீச்சிலும் அசத்தினார். இந்த சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.


கலகல சம்பவம்:


10 டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமரின் வீட்டில் இந்த கலகலப்பான சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவை பிரதமரின் மூத்த வீடியோகிராபர் லூகா போஃபா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். ரிஷி சுனக்கின் பேட்டிங் திறமை பல்வேறு தரப்பினரை கவர்ந்துள்ளது. 


 






இந்த வீடியோ யூடியூப்பிலும் பகிரப்பட்டுள்ளது. "T20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் மற்றும் ACE கிரிக்கெட் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிக் குழந்தைகளுடன்  டவுனிங் ஸ்ட்ரீட் கார்டனில் பிரதமர் ரிஷி சுனக் கிரிக்கெட் விளையாடினார்" என பதிவிடப்பட்டுள்ளது.