இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் காயம் தொடர்பான விவரங்களை, பி.சி.சி.ஐ. ரகசியமாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காயம் தொடர்பாக பும்ரா மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் பேச, வி.வி.எஸ். லட்சுமணனுக்கு மட்டுமே பி.சி.சி.ஐ. அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


பும்ரா காயம்:


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய வீரராக விளங்கும் பும்ரா, காயம் காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. நியூசிலாந்தில் அவருக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அங்கேயே அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வு எடுத்து வருகிறார். ஆனாலும், அவர் இன்னும் முழு உடற்தகுதி பெறாதது இந்திய அணிக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக உள்ளது. இந்நிலையில் பும்ரா உடல்நிலை தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பிசிசிஐ காக்கும் ரகசியம் என்ன? 


இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, ”இந்திய கிரிக்கெட் சம்மேளனத்திலேயே ஒரு சிலருக்கு மட்டும் தான் பும்ராவின் உடல்நிலை தொடர்பான தகவல் தெரியும். தேர்வுக்குழுவினருக்கு கூட பும்ராவின் காயம் மற்றும் அவர் எவ்வாறு குணமடைந்து வருகிறார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை” என கூறப்படுகிறது. பும்ரா மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உடன் தொடர்பு கொள்ள, முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமணனை பிசிசிஐ நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. பும்ராவின் காயம் குறித்த விவரங்களை பிசிசிஐ ஏன் மறைக்க முயற்சிக்கிறது என்பது தொடர்பான தகவல் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.


இந்திய அணியில் தாக்கம்:


29 வயதான ஜஸ்பிரித் பும்ரா முதுகு வலி காரணமாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மருத்துவ கண்காணிப்பிற்கு சென்றார். இதனால், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலககோப்பை தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. அந்த தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது. தற்போதும் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ள சூழலில், இங்கிலாந்தில் வரும் ஜுன் மாதம்  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் பும்ரா பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலககோப்பை தொடரில் அவர் பங்கேற்பாரா என்பதும் தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதுவரை இந்திய அணிக்காக இவர் 30 டெஸ்ட், 70 ஒருநாள் போட்டிகள் மற்றும் 57 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஐபிஎல் தொடரில் பங்கேற்காத பும்ரா:


இதனிடையே, நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.  இந்த தொடரிலும் அவர் முழுமையாக பங்கேற்க மாட்டார். அவர் விளையாடாதது, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.