இந்த ஆண்டு முதல் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் பிரிமியர் லீக்கின் தற்போது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளே மீதமுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (மார்ச், 21) மும்பையில் உள்ள பிராபவுர்ணி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி பவர்ப்ளேவில் (முதல் 6 ஓவர்கள்) டெல்லி அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார்கள். கொஞ்ச நேரத்தில் நமது முடிவு சரியா தவறா என மெக் லேனிங் யோசிக்கும் அளவிற்கு உ.பி. அணியின் ஆட்டம் இருந்தது. இந்த ஆட்டம் முதல் 10 ஓவர்கள் வரை தொடர்ந்தது.
அதன் பின்னர் மிகத் தீவிரமாக பந்து வீசிய டெல்லி அணியின் மிரட்டலான பந்து வீச்சுக்கு, உ.பி அணியினர் அணி வகுப்பு நடத்தினர் என கூறலாம். குறிப்பாக 18வது ஓவரின் முதல் பந்து மற்றும் 4வது பந்தில் அலெக்ஸ் கேப்ஸி விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனால், டெல்லி அணி ஆட்டத்தினை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
20 ஓவர்கள் முடிவில் உத்தர பிரதேச வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தனர். உத்தர பிரதேச அணியின் சார்பில், தாலிய மெக்ரா ரன்கள் 58 சேர்த்தார். இந்த மகளிர் பிரிமியர் லீக்கில் அவரது 4வது அரைசதம் ஆகும். டெல்லி அணி சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் அலெக்ஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.