WPL 2023, RCB-W vs MI-W:  மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 


மகளிர் பிரிமியர் லீக்கில் இன்று (மார்ச் 21) இரண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளுக்கும் இந்த போட்டிதான் லீக் போட்டியில் கடைசி போட்டியாகும். ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறியுள்ள பெங்களூரு அணி வெற்றியுடன் இந்த சீசனை முடிக்க முயற்சி செய்யும் முனைப்பில் களமிறங்கியது. அதேபோல், இந்த போட்டியில் வெற்றியை நழுவவிட்டால் அது ஹாட்ரிக் தோல்விக்கு வழிவகுக்கும் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. 


இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கத்தில் முதல் விக்கெட் விழ, அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. ஆனால் ரன்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. பலமான மும்பை அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள திணறிய  பெங்களூரு அணி தனது 50-வது ரன்னை 10வது ஓவரிலும், 100வது ரன்னை 17வது ஓவரிலும் தான் எடுத்தனர். இறுதியில் அதிரடி ஆட்டம் ஆடிய ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 29ரன்கள் எடுத்த நிலையில்- கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.


மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் கெர் 3 விக்கெட்டுகளும், ஷிவர் பிரண்ட் மற்றும் வாங் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.  


அதன் பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடியது. மும்பை அணியின் நோக்கம் இந்த போட்டியை வெல்வதுடன், அதிக வித்தியாசத்தில் வென்று டாப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்குச் செல்வதுடன், நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் எனும் நோக்கில் இருந்தது. மும்பை அணியின் நோக்கத்திற்கு ஏற்றவாறு பவர்ப்ளே சிறப்பாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, மும்பை அணியால் சிறப்பான பட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை. குறிப்பாக 53 ரன்னில் தனது முதல் விக்கெட்டை இழந்த மும்பை அணி அடுத்த 20 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் போட்டியை வெல்வது முக்கியம் என்பதை உணர்ந்த மும்பை அணியினர் நிதானமாக ஆடத் தொடங்கினர். 


ஆனால், பெங்களூரு அணியைப் பொறுத்த மட்டில் சிறப்பாக பந்து வீசியதுடன்  மும்பை அணிக்கு சிறப்பான பீல்டிங் மூலமாகவும் நெருக்கடி கொடுத்தனர். ஆனாலும், இறுதியில் மும்பை அணி 16.3 ஓவர்களில் ’6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் 8 வீராங்கனைகள் பந்து வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனிகா ஓஜா 16வது ஓவரை வீசி இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.