மகளிர் பிரிமியர் லீக்கில் இன்று இரண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளுக்கும் இந்த போட்டிதான் லீக் போட்டியில் கடைசி போட்டியாகும். ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறியுள்ள பெங்களூரு அணி வெற்றியுடன் இந்த சீசனை முடிக்க முயற்சி செய்யும் முனைப்பில் களமிறங்கியது. அதேபோல், இந்த போட்டியில் வெற்றியை நழுவவிட்டால் அது ஹாட்ரிக் தோல்விக்கு வழிவகுக்கும் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. 


இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்து இருந்தது. பெங்களூரு அணியின் ஷோஃபி டிவைன் ரன் கணக்கை துவங்க ஓடும்போதே ரன் அவுட் செய்யப்பட்டார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. ஆனால் ரன்கள் வரவில்லை. பெங்களூரு அணி தனது 50-வது ரன்னை 10வது ஓவரிலும், 100வது ரன்னை 17வது ஓவரிலும் தான் எடுத்தனர். இறுதியில் அதிரடி ஆட்டம் ஆடிய ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 29ரன்கள் எடுத்த நிலையில்- கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.


மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் கெர் 3 விக்கெட்டுகளும், ஷிவர் பிரண்ட் மற்றும் வாங் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.