மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது.  


சம்மர் வந்துவிட்டாலே அது அனல் பறக்கும் ஐபிஎல்-க்கான காலம் என அனைவரது மனதில் பதியும் அளவிற்கு கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. பணம் அதிகம் புழங்கும் களம் என்பதால் ஐபிஎல் போட்டிக்கு என தனி மவுசே இங்கு உள்ளது எனலாம். அவ்வரிசையில் இன்று புதிய அத்தியாயமாக மகளிருக்கான 20 ஓவர் பிரிமியர் லீக் போட்டி இன்று தொடங்குகிறது. 


தொடக்க நாள் என்பதால் தொடக்க விழாவுடன் மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளன. முதல் மகளிர் பிரிமியர் லீக்கில் மொத்தம் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.  மும்பை இந்தியன்ஸ் (MI), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), டெல்லி கேபிடல்ஸ் (DC), UP வாரியர்ஸ் (WPW) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (GG). இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் எம்ஐ கேப்டனாகவும், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி மகளிர் அணிக்கு கேப்டனகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய மகளிர் அணியின் வெற்றிகரமான கேப்டன் என புகழப்படும் மெக் லானிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார், அதேபோல் பெத் மூனி குஜராத் ஜெயண்ட்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் யு.பி வாரியரஸ் அணிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அலிசா ஹீலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


மார்ச் மாதம் 4ஆம் தேதி அதாவது இன்று தொடங்கும் மகளிர் பிரிமியர் லீக்கின் இறுதிப் போட்டி மார்ச் மாதத்தின் 26வது நாளில் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவில் மகளிர் பிரிமியர் லீக்கிற்கான தீப் பாடலை பாடகர் சங்கர் மகாதேவன் பாடவுள்ளார். மேலும், பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் மகளிர் பிரீமியர் லீக் தொடக்க விழாவில் ராப்பரும் பாடகியுமான ஏபி தில்லானுடன் இணைந்து பாடுவார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்தது. 


பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி மற்ற பிசிசிஐ நிர்வாகிகளும் மகாராஸ்ட்ரா முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் பிரிமியர் லீக் 2023 தொடக்க விழா நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் மாலை 5.30 க்கு நடைபெறுகிறது.  அதேபோல் தொடக்க விழா மற்றும் போட்டியை  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஹாட்ஸ்டாரில் லைவ்வாக காணலாம்.