ஆஸ்திரேலிய வீரர்களால் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தாலும் நேசிக்கப்பட்ட ஷேன் வார்னே மறைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே கடந்த ஆண்டு இதே தினத்தில் அதாவது மார்ச் மாதம் 4ஆம் தேதி தான் தாய்லாந்தில் தனது 52வது வயதில் காலமானார். இந்த செய்தி வெளியானதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். முதலில் யாரும் இதை நம்பவில்லை, பலர் இது பொய்யாக இருக்கும் என கூட கூறினார்கள். காரணம் ஷேன் வார்னே அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்.
இது இன்று இந்தியாவுக்கு பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட்டில் தடுமாறி வருவதை பார்க்க முடிகிறது. ஆனாலும் அதன் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருக்க காரணம் ஷேன் வார்னேவின் தாக்கம்தான். சுழற்பந்தில் தடம் பதிக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு வீரருக்கும் ஷேன் வார்னே நிச்சயம் முன் மாதிரியாக இருப்பார்.
உலகமே உற்று நோக்கும் அளவிற்கு ஷேன் வார்னேவின் சுழற்பந்துக்கு விக்கெட்டை பறிகொடுக்காத வீரரே இல்லை. ஆஃப் சைடில் அல்லது லெக் சைடில் வைடாக போகக் கூடிய பந்து என பேட்ஸ் மேன்கள் நினைப்பதைப்போல் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர்களும் நினைத்து தங்களை தயார்படுத்திக் கொள்ளும் போது, நொடிப் பொழுதில் பந்து ஸ்ட்ம்பை பதம் பார்த்து அம்பையர் உள்பட அனைவரையும் ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கிவிடும். அப்படியான மாயாஜால பந்து வீச்சை தனக்குள் வைத்திருந்தவர் தான் ஷேன் வார்னே.
இப்படித்தான் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கடந்த 1993ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி ஓல்ட் டிராஃபோர்டில் உள்ள மைதானத்தில் பந்து வீச ஷேன் வார்னே தயாராக இருந்தார். இது தான் இவரது முதல் ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஸ்டிரைக்கில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் மைக் கேட்டிங் இருந்தார். மைக் கேட்டிங் இப்படி தான் தனது விக்கெட்டை பறிகொடுப்பேன் என ஒரு போதும் நினைத்து இருக்க மாட்டார்.
வார்னே வீசிய பந்து முதலில் நேராகச் செல்வது போன்று இருந்தது. ஆனால் பிட்ச் ஆனதற்குப் பிறகு வலது புறமாக சுழல ஆரம்பித்தது. அப்போது மைக் கேட்டிங் பந்தை தடுப்பதற்காக பேட்டை நகர்த்த ஆனால் மைக் கேட்டிங்கின் கணிப்பை எல்லாம் தவிடு பொடியாக்கி நொடிக்கும் குறைவான நேரத்தில் பந்து ஸ்டெம்ப்பை தாக்கி மைக் கேட்டிங்கிற்கு ”டாடா - பைபை” சொன்னது. இது களத்தில் நடுவராக இருந்த டிக்கி போர்ட் உள்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மைக் கேட்டிங் என்ன நடந்தது என புரியாமலே வெளியேறிக் கொண்டு இருந்தார். இந்த பந்து அந்த நூற்றாண்டின் தலை சிறந்த பந்து என வர்ணிக்கப்பட்டது.
இப்படி இவரால் வெளியேற்றப்பட்ட பேட்ஸ்மேன்கள் மட்டும், 708 பேர். ஆமாம், டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை வார்னே பெற்றுள்ளார். மொத்தத்தில் , வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 25.41 சராசரியில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஏன்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான புகழுக்குச் சொந்தகாரரான ஷேன் வார்னே இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.