இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் பிரிமியர் லீக் 2023 கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்களுக்கான பிரிமியர் லீக் அதாவது ஐபிஎல் போட்டி போல் மகளிருக்கும் டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டு இந்த ஆண்டு நடத்தப்பட்டு வருகிறது. 
 

இதில் ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் உள்ள அணிகளில் இருந்து மூன்று அணிகளும் மற்றும் புதிய அணிகள் என இரண்டு அணிகளும் மொத்தம் ஐந்து அணிகள் இந்த ஆண்டு களமிறங்கின. அதில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் உள்ள அணி நிர்வாகங்கள் தான். அதேபோல், ஐபிஎல்லில் இல்லாத குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் உத்தர பிரதேச வாரியர்ஸ் என இரண்டு அணிகள் என மொத்தம் ஐந்து அணிகள் மோதிக்கொண்டன.

 

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். அதில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதிலும், முதல் இடத்தில் இருக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், அடுத்த இரண்டு இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதி அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 

 

லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்றும் நெட் ரன்ரேட் +1.856 என முதலிடம் பிடித்த தால், அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக, மும்பை இந்தியன்ஸ் அணி 8 லீக் போட்டிகளில் 6ல் வென்று நெட் ரன்ரேட் +1.711 என பெற்றிருந்ததால் இரண்டாவது இடம் பிடித்தது. அதேபோல், உத்தர பிரதேச வாரியர்ஸ் அணி லீக் போட்டியில் 4இல் வென்றும் 4இல் தோற்றும் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்தது. 

 

மும்பை இந்தியன்ஸ் அணியும் உ.பி வாரியஸ் அணியும் எலிமினேட்டர் சுற்றில் இன்று மோதிக்கொள்ளவுள்ளன. மகளிர் பிரிமியர் லீக்கின் மிகவும் பலமான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பார்க்கப்படுகிறது. அந்த அணி தனது முதல் ஐந்து லீக் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காமல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. ஆறாவது போட்டியாக உ.பி. வாரியர்ஸை எதிர் கொண்ட மும்பை அணிக்கு, அதன் வெற்றிப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடும் தோல்வி காத்து இருந்தது. 

 

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் இரண்டாவது போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் எலிமினேட்டரில் மோதிக் கொள்வதால், வெற்றி யாருக்கு என கேள்வியை எழுப்பியுள்ளது. இரண்டு அணிகளின் லீக் சுற்றை வைத்துப் பார்ர்கும் போது மும்பை அணி பலமான அணியாக உள்ளது. அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

 

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை லைவாக ஜியோ சினிமாவிலும், உடனுக்குடன் அப்டேட்டுகளுகள் பற்றி தெரிந்து கொள்ள ஏபிபி இணையதளத்திலும் காணலாம்.