வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் அயர்லாந்து அணி, ஒருநாள் தொடரை இழந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் வங்கதேச அணி சிறப்பாக விளையாடிய போதிலும் மழை காரணமாக அந்த போட்டி கைவிடப்பட்டது.


தொடரை தீர்மானித்த மூன்றாவது போட்டி:


இந்நிலையில், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி பேட்டிங்கை தேர்வு செய்தார்.


ஆனால், அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஸ்டீபன் டோஹனி, பால் ஸ்டிர்லிங் சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை பறி கொடுத்தனர்.


அதன் பிறகு விளையாடிய வீரர்களும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின கேப்டன் ஆண்ட்ரூ 6 ரன்களிலும் ஹாரி டெக்டர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். 


இப்படி, திணறி கொண்டிருந்த அணிக்கு கர்டிஸ் கேம்பர், லோர்கன் டக்கர் ஜோடி ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தனர். ஆனால், அதுவும் நீண்ட நேரத்திற்கு கை கொடுக்கவில்லை. 28 ரன்கள் எடுத்திருந்தபோது லோர்கன் தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்து பெவிலியன் திரும்பினார்.


இதை தொடர்ந்து, கேம்பரும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், விளையாட வந்த அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கு ரன்களுடன் நடையை கட்டினர். இறுதியில், 28.1 ஓவர்களின் முடிவில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது அயர்லாந்து.


அயர்லாந்தை கதறவிட்ட வங்கதேசம்:


இதையடுத்து, எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தமிம் இக்பாலும் லிட்டன் தாஸூம் அயர்லாந்து அணி பந்துவீச்சாளர்களின் பந்தை நாலா புறமும் சிதறடித்தனர்.


இதனால், வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி 13.1 ஓவர்களிலேயே எட்டியது வங்கதேசம். தமிம் 41 ரன்களும் லிட்டன் தாஸ் 50 ரன்களும் எடுத்தனர். 


இதனால், தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. ஐந்து விக்கெட்டை வீழ்த்திய ஹசன் மஹ்மூத், ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் முழுவதுமே பட்டையை கிளப்பிய முஷ்பிகுர் ரஹீம் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹீம் 44 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.


இதையடுத்து, டி20 தொடர் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மார்ச் 29ஆம் தேதியும் மூன்றாவது போட்டி மார்ச் 31ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஒரு நாள் போட்டியை போலவே, டி20 தொடரிலும் வங்கதேச அணி சிறப்பாக விளையாடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிக்க: UPW-W vs GG-W, Match Highlights: புரட்டி எடுத்த மெக்ராத், கிரேஸ் ஜோடி...த்ரில் போட்டியில் உத்தர பிரதேச அணி வெற்றி..ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி..!