மகளிர் பிரீமியர் லீல் 2023 தொடரின் 10 வது போட்டியில் நேற்று உபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியானது மும்பை பார்பவுர்ணி மைதானத்தில் நடைபெற்றது.  தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியுடன் களமிறங்கியது மும்பை அணி. 


முதலில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஹீலி மற்றும் தேவிகா களமிறங்கினர். 


உபி வாரியர்ஸ் 8 ரன்களை எடுத்திருந்தபோது தேவிகா 6 ரன்களில் வெளியேறினார். 3 வதாக களமிறங்கிய கிரண் 17 ரன்கள் எடுக்க, பவர் ப்ளே முடிவில் ஒரு விக்கெட்ட் இழப்புக்கு உபி அணி 48 ரன்கள் எடுத்திருந்தது. 


ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹீலி அரைசதம் கடந்து அவுட்டாக, அடுத்து உள்ளே வந்த மெக்ரத் தன் பங்கிற்கு 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் உத்தர பிரதேச அணி 159 ரன்கள் எடுத்தது. 


மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில்  இஷாக் மூன்று விக்கெட்டுகளும் அமீலா கெர் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர். 


160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அப்போது தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஹேலி மேத்யூஸ் பேட்டிங் செய்தபோது மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. ஹேலி மேத்யூஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஐந்தாவது ஓவரில் சோஃபி எக்லெஸ்டோன் யார்க்கர் வீசினார். அப்போது அந்த பந்தானது ஹேலியின் காலில் பட்டதா..? அல்லது பேட்டில் பட்டதா ? என்ற கேள்வி எழுந்தது. எக்லெஸ்டோன் தனது கேப்டன் அலிஸ்ஸா ஹீலியைப் பார்த்தார், அவர் "எனக்குத் தெரியாது" என்று சைகை செய்தார். 






அப்போது ஆன் பீல்ட் அம்பயர் பஷ்சிம் பதக் நாட் அவுட் என பதிலளித்தார். இதையடுத்து, ஹீலி டி.ஆர்.எஸ் கேட்டார். மூன்றாவது நடுவரின் ரீப்ளே, பந்து மட்டையைத் தாக்கும் முன், மேத்யூஸின் கால் விரலில் இருந்து விலகிச் சென்று, பந்து கண்காணிப்பு பந்து நேராக மிடில் ஸ்டம்பிற்குள் செல்வதைக் காட்டியது.


இதையடுத்து நடுவர் பதக், ஹேலி மேத்யூஸ் அவுட் என அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஹேலி மேத்யூஸ் வெளியேறாமல் நின்று பந்து பேட்டில் தான் பட்டது என விவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மைதானத்திற்கு நடுவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மற்றொரு கோணத்தில் பார்த்தபோது, பந்து காலில் படவில்லை. பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. 






இறுதியில், இது ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேறு ஒரு காட்சியை பதிவிட்டுவிட்டதாக மூன்றாவது நடுவர் தெரிவித்தார். ஹேலி ஆட்டமிழக்க வில்லை என்று தெரிவித்து தங்களது முடிவையும் திரும்ப பெற்றனர். சரியாக இந்த சம்பவத்திற்கு பிறகு ஏழாவது பந்தில் ஹேலி மேத்யூஸ் அவுட்டாகி வெளியேறினார். 


மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஷிவர் பர்ண்ட் இருவரும் உபி அணியின் பந்து வீச்சை நொறுக்க தொடங்கினர். 15 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 16வது ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாச மும்பை அணிக்கு அது வெற்றி இலக்கிற்கு அருகில் அழைத்துச் சென்றது. இறுதியில் மும்பை அணி 164 ரன்கள் எடுத்து தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்தது.