வங்கதேச சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி T20 தொடரை இழந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், வங்கதேசம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
டி20யில் உலக நடப்பு சாம்பியான இங்கிலாந்து அணி வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் டி20 போட்டியை வென்ற வங்கதேசம், அதே உத்வேகத்துடன் நேற்று இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியானது டாக்காவில்
உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் மட்டுமே 2 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்திருந்தார். இவருக்கு அடுத்தபடியாக பிலிப் சால்ட் 19 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 25 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து. மொயீன் அலி 15 ரன்களும், சாம் குர்ரன் 12 ரன்களும், ரெஹான் அஹமட் 11 ரன்களையும் எடுத்திருந்தனர். இது தவிர எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தை தாண்ட முடியவில்லை.
சிறப்பாக பந்துவீசிய வங்கதேசம்:
வங்கதேசம் இங்கிலாந்து மீது தொடக்கம் முதல் தாக்குதல் பந்துவீச்சை தொடுத்தது. மெஹ்தி ஹசன் மிராஜ் 4 ஓவர்களில் 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடரை வென்ற வங்கதேசம்:
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்தில் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தலா 9 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். இதன்பின், மூன்றாம் இடத்தில் களமிறங்கிய நஜ்முல் ஹுசைன் சாண்டோ 3 பவுண்டரிகள் உதவியுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி அணியை வெற்றியின் வாசலுக்கு கொண்டு வந்தார். இதுதவிர மெஹ்தி ஹசன் மிராஜ் கடைசி கட்டத்தில் 2 சிக்சர்கள் உதவியுடன் 20 ரன்களை அணியில் சேர்த்தார். இறுதியில் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 120 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களும், சாம் கர்ர்ன், மொயீன் அலி மற்றும் ரெஹான் அகமது தலா 1 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் வருகின்ற செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) நடைபெற உள்ளது. டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய ஸ்டேடியம் போட்டியை நடத்துகிறது.
கணிக்கப்பட்ட அணிகள் விவரம்:
வங்கதேசம் :
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ரோனி தாலுக்தார் , லிட்டன் தாஸ், தௌஹித் ஹிரிடோய்/ஷமிம் ஹொசைன், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் ( விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான் , தஸ்கின் அகமது, நாசும் அஹ்மத்
இங்கிலாந்து:
பில் சால்ட் (விக்கெட் கீப்பர் ), ஜோஸ் பட்லர் (கேப்டன்) , பென் டக்கெட், டேவிட் மாலன் , மொயின் அலி, சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட் , ரீஸ் டாப்லி
சொந்த மண்ணில் 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்த வங்கதேசம், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மீண்டு வெற்றிபெற்றது. தொடர்ந்து முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது.