DC-W vs MI-W, WPL 2023: மும்பை டெல்லி அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று மோதிக்கொண்டன. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளி பட்டியலில் மும்பை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. 


இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இன்று (மார்ச் 9) இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.   இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்ட்ங் தேர்வு செய்தது. 


அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பம் மிகவும் சிறப்பாக அமைந்தது. போட்டியின் முதல் பந்து பவுண்டரிக்கு தட்டிவிடப்பட்டது. ஆனால் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் இந்த தொடரின் பர்ப்பல் கேப் நாயகி இஷாக் வீசிய பந்தில் ஷஃபாலி வர்மா க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் சேர்த்து தடுமாறி வந்தது. 


அதன் பின்னர் களமிறங்கிய கேப் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய ஜெமிமா 8 வது ஓவரில் 3 பவுண்டரிகள் பறக்க விட்டு ஆட்டத்தில் சுறுசுறுப்பைக் கொண்டுவந்தார்.  ஆரம்பத்தில் இருந்து தடுமாறி வந்த இந்த போட்டியில் மட்டும் முதல் 9 ஓவர்களுக்குள் லேனிங் கொடுத்த 6 கேட்ச் வாய்ப்புகளை மும்பை வீராங்கனைகள் தவறவிட்டனர். 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் சேர்த்தது. 


முதல் 10 ஓவருக்குப் பின்னர் அடித்து ஆடத்தொடங்கிய கேப்டன் லேனிங் 11 ஓவரின் முதல் மூன்று பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டு ஆட்டத்தை டெல்லி பக்கம் கொண்டுவர முயற்சி செய்தார். சிறப்பாக விளையாடி வந்த  ஜெமிமா மற்றும் லேனிங் இஷாக் வீசிய 13 ஓவரில் அவரது சிறப்பான  பந்துவீச்சில்  வெளியேறினர். 


அதன் பின்னர் 14 ஓவரில் மேத்யூஸ் முதல் பந்திலும் நான்காவது பந்திலும் விக்கெட் எடுத்து டெல்லி அணிக்கு நெருக்கடியை அதிகரித்ததுடன் போட்டியை முழுவதுமாக மும்பை அணியின் வசம் கொண்டு வந்தார். 15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்து இருந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் 200 ரன்களைக் கடந்த டெல்லி இந்த போட்டியில் 100 ரன்களைக் கடக்கவே தடுமாறியது.  17வது ஓவரின் 3 பந்தில் டெல்லி அணி தனது 100வது ரன்னை எடுத்தது, அதற்கு டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் டெல்லி அணி 18 ஓவர்களுக்கு 105 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 


டெல்லி அணியின் சார்பில் கேப்டன் லேனிங் மட்டும் 43 ரன்கள் எடுத்து இருந்தார்.  மும்பை அணியின் சார்பில் இஷாக்,மேத்யூஸ்  மற்றும் யாங்  தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மும்பை தான் விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது.