உலககோப்பை தொடரில் முன்னேறுவதற்காக கடைசி 2 இடங்களுக்காக 10 அணிகள் தகுதிச்சுற்று தொடரில் ஆடி வருகின்றனர். முன்னாள் சாம்பியன்களான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் ஓமன், நேபாளம், அமெரிக்கா போன்ற அணிகளும் களமிறங்கியுள்ளன.


பலமிகுந்த அயர்லாந்து:


ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்த தொடரில் புலவாயோ நகரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் அயர்லாந்து – ஓமன் அணிகள் நேருக்கு நேர் மோதின. அயர்லாந்து அணி பாகிஸ்தான் அணியையே ஏற்கனவே வீழ்த்திய அனுபவம் கொண்ட அணி என்பதாலும், ஓமனுடன் ஒப்பிடும்போது அயர்லாந்து அணி பலமிகுந்த அணி என்பதாலும் இந்த போட்டியில் அயர்லாந்து எளிதாக வெற்றி பெற்று விடும் என்றே ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நடந்ததோ வேறு.


டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசியது. அயர்லாந்து அணிக்கு மெக்ப்ரைன் – ஸ்டிர்லிங் சிறப்பான தொடக்கம் அளித்தனர். 51 ரன்களை எட்டியபோது ஸ்டிர்லிங் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பால்பிரைன் நிதானமாக ஆடினார். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த மெக்பிரைன் 20 ரன்களில் அவுட்டாக, கேப்டன் பால்பிரைன் 7 ரன்களில் அவுட்டானார்.


282 ரன்கள் டார்கெட்:


அடுத்து ஹாரி டெக்டர் – டக்கருடன் ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதல் அதிரடியாக டக்கர் 18 பந்தில் 5 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆயன்கான் பந்தில் போல்டானார். 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணிக்காக டெக்டர் – டாக்ரெல் ஜோடி சிறப்பாக ஆடியது. இவர்கள் இருவரும் நிதானமாகவும், நேர்த்தியான பந்துகளை மட்டும் அடித்தும் ஆடினர். இதனால், அயர்லாந்து ஸ்கோர் மெல்ல, மெல்ல ஏறியது.


சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டெக்டர் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த டெலனி 14 பந்துகளில் அதிரடியாக 20 ரன்கள் எடுக்க, மார்க் அடெய்ர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் டாக்ரெல் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர், இதனால், அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது. டாக்ரெல் 89 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 91 ரன்களுடனும், ஹூமே 12 பந்தில் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.


அதிரடி காட்டிய ஓமன்:


அடுத்து 285 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஓமனுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜதீந்தர் சிங் 1 ரன்னில் அவுட்டாக அடுத்து ஜோடி சேர்ந்த காஷ்யப் – அகீப் ஜோடி அதிரடியாக ஆடியது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். அகிப் இலியாஸ் 49 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் மக்சூத் பொறுப்புடன் ஆடினார்.


மறுமுனையில் சிறப்பாக ஆடிய காஷ்யப் 74 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், கேப்டன் மக்சூத் – நதீம் ஜோடி சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 222 ரன்களை எட்டியபோது கேப்டன் மக்சூத் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 67 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசினார். அடுத்து வந்த ஆயன் கான் 21 பந்தில் 21 ரன்களில் வெளியேற அடுத்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் ஓமன் வீரர்கள் பார்த்துக்கொண்டனர்.


அயர்லாந்துக்கு அதிர்ச்சி:


கடைசியில் ஓமன் 48.1 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. முகமது நதீம் 53 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 46 ரன்களுடனும், சோயப் கான் 17 பந்தில் 3 பவுண்டரியுடன் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பலமிகுந்த அயர்லாந்து அணியை ஓமன் அணி வீழ்த்தியதை அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.