பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து 393 ரன்களை குவிக்க, ஆஸ்திரேலியா கவாஜா சதத்தால் 383 ரன்களை குவிக்க 2வது இன்னிங்சில் இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடங்கியது.
273 ரன்களுக்கு ஆல் அவுட்:
ஒல்லி போப்பும், ஜோ ரூட்டும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஒல்லி போப் 14 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஹாரி ப்ரூக் – ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 46 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் 46 ரன்களில் ஆட்டமிழக்க 150 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென்ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடினார்.
அவருக்கு ஜானி பார்ஸ்டோ நல்ல ஒத்துழைப்பு அளித்தார். பார்ஸ்டோ 39 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ரன்களை எடுத்த நிலையில் அவுட்டாக, அடுத்து வந்த மொயின் அலி நிதானமாக ஆடினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் ஸ்டோக்ஸ் 66 பந்தில் 5 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசியில் ராபின்சன் 27 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 66.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
வெற்றி பெறப்போவது யார்?
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்களை இங்கிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, இந்த மைதானத்தில் 281 ரன்கள் என்பது சற்று கடினமானதே ஆகும். இதைத்தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய உஸ்மான் கவாஜா – டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.
கடந்த இன்னிங்சில் சொதப்பிய வார்னர் 57 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லபுஷேனே களமிறங்கினார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி விளாசிய நிலையில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது பிராட் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் இந்த இன்னிங்சில் அசத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தை பிராட் அவுட்டாக்கினார்.
நெருக்கடியில் ஆஸ்திரேலியா?
நேற்றைய ஆட்ட நேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 34 ரன்களுடனும், போலந்து 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 174 ரன்கள் தேவைப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் தொடங்க இங்கிலாந்திற்கு இன்னும் 7 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. முக்கிய விக்கெட்டுகளான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனே அவுட்டாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
அந்த அணியில் ட்ராவிஸ் ஹெட், கிரீன், கேரி, கம்மின்ஸ் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடைசி நாள் பரப்பான கட்டத்தை எட்டியுள்ளதால் இரு நாட்டு ரசிகர்களும் வெற்றிபெற போவது யார் என்பதை காண ஆர்வமுடன் உள்ளனர்.
மேலும் படிக்க: WC Qualifiers: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சதமடித்த அமெரிக்க வீரர்.. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அசத்தல்..!
மேலும் படிக்க: IND vs WI: புஜாராவுக்கு இடமில்லையா..? அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார்..? வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஒரு பார்வை!