2023 ம் ஆண்டு நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையின் நான்காவது போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. புனேவில் வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்புள்ளது.
விராட் கோலி இன்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை படைப்பார். கோலி இதுவரை 510 போட்டிகளில் 566 இன்னிங்ஸ்களில் 25, 923 ரன்கள் எடுத்துள்ளார். கோலி அடுத்த 34 இன்னிங்ஸ்களில் 77 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26, 000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே 26,000 ப்ளஸ் ரன்களை எடுத்துள்ளனர். இந்தப் பட்டியலில் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் 34, 357 ரன்கள் குவித்த டெண்டுல்கர் முன்னிகை வகித்தார். அவரை தொடர்ந்து இலங்கையின் குமார் சங்கக்கார 594 போட்டிகளில் 666 இன்னிங்ஸ்களில் 28, 016 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 560 போட்டிகளில் 668 இன்னிங்ஸ்களில் 27,483 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மஹேல ஜெயவர்த்தனே 652 போட்டிகளில் 725 இன்னிங்ஸ்களில் 25, 957 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார்.
ஜெயவர்த்தனேவை முந்தும் வாய்ப்பு:
இன்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விராட் கோலி வெறும் 35 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ஜெயவர்த்தனேவை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறுவார்.
ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள்:
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி 8வது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் 40 ரன்கள் எடுத்தால், ஹகிப் அல் ஹாசன் மற்றும் ரோஹித் சர்மாவை முந்துவதற்கு வாய்ப்பும் உள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சாதனையைப் பார்த்தால், இதுவரை சிறப்பாகவே உள்ளது. விராட் கோலி இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 807 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் அடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 136 ரன்கள் எடுத்ததே கோலியின் சிறந்த ஸ்கோராகும். அவரது சராசரி 67.25.