2023 உலகக் கோப்பையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வங்காளதேசத்தை எதிர்த்து புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இன்று விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும். ஆனால், உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் பெரும் அப்செட்டை செய்தது உங்களுக்கு தெரியுமா? கடந்த 2007 ஒருநாள் உலகக் கோப்பையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அதன்பிறகு இலக்கை துரத்திய வங்கதேச அணி வெற்றிபெற்று அசத்தியது. 


முதலில் பேட்டிங் செய்த ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 49.3 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சவுரவ் கங்குலி 66 ரன்கள் குவித்து சிறிது நம்பிக்கை அளித்தார். இது தவிர மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங் 47 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பிறகு, மொத்தம் 6 பேட்ஸ்மேன்களால் இரட்டை ரன்களைக் கூட கடக்க முடியவில்லை. விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி உட்பட மூன்று பேட்ஸ்மேன்கள் தங்கள் கணக்கைத் திறக்காமல் பெவிலியன் திரும்பினர். 


அப்போது, வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக மஷ்ரஃப் மோர்டசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து, அப்துர் ரசாக் மற்றும் முகமது ரபீக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை தங்கள் பந்துவீச்சில் கைப்பற்றி இருந்தனர். இதன் போது மோர்டசா 9.3 ஓவர்களில் 38 ரன்களையும், ரசாக் 10 ஓவர்களில் ரன்களையும், ரபீக் 10 ஓவர்களில் 35 ரன்களையும் பெற்றனர். 


192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய வங்கதேசம் 48.3 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் முஷ்பிகுர் ரஹிம் 56* ரன்களையும், ஷகிப் அல் ஹசன் 53 ரன்களையும், தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 51 ரன்களையும் பெற்றனர். இதன் போது இந்திய தரப்பில் முனாப் படேல் மற்றும் வீரேந்திர சேவாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். 


2007 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நிலைமை: 


2007 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் 2ல் தோல்வியடைந்து குரூப் ஸ்டேஜில் இருந்து வெளியேறியது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோல்வியை தொடர்ந்து இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் பெர்முடா அணியை மட்டும் வீழ்த்தியது. 


2023 உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு பெரிய தோல்விகள்: 


இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு பெரிய அப்செட்டு போட்டிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியின் 13வது ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. இதற்குப் பிறகு, கடந்த செவ்வாய்கிழமை (அக்டோபர் 17), உலகக் கோப்பை 2023 போட்டியின் 15 வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து அணி வெற்றிபெற்றது. இன்றைய போட்டியில் அப்படி ஏதாவது நிகழ்ந்தால் இந்த உலகக் கோப்பை வேறுமாதிரியாக இருக்கும்.