நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று இந்திய அணி வென்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 


உலகக் கோப்பை 2023ல் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்தின் பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த இரு அணிகளும் அடுத்து தாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 8 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். ஆனால், இது அரையிறுதிக்கு தகுதிபெற போதுமானதாக இருக்காது. 


இந்த இரண்டு அணிகளை தவிர, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிகளின் நிலையும் மதில் மேல் உள்ள பூனையின் நிலைமை போல்தான் உள்ளது. இங்கிருந்து இந்த மூன்று அணிகளும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைந்தாலும் உலகக் கோப்பையிலிருந்து வெளியேற வேண்டியதுதான். 


அரையிறுதிக்கு செல்ல இந்தியாவுக்கு இன்னும் ஒரு வெற்றி தேவை: 


2023 உலகக் கோப்பையில் வெற்றித் தேரில் ஏறிச் செல்லும் இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற இன்னும் ஒரு வெற்றி மட்டும் தேவையாக உள்ளது. நேற்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பிறகு, வருகின்ற நவம்பர் 2ம் தேதி இலங்கை அணியை சந்திக்கிறது இந்திய அணி. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு தகுதிபெறும். 


இப்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் 14 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு செல்ல கூடிய நிலையில் 4 அணிகள் மட்டுமே உள்ளது. அவை இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் ஆகும். 


கிட்டத்தட்ட வெளியேறிய இங்கிலாந்து, வங்கதேசம்: 


நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உடன் வங்கதேசத்தின் உலகக் கோப்பை பயணமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல ஆண்டுகளாக உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் பங்கேற்று வரும் வங்கதேசத்தை நெதர்லாந்து அணி தோற்கடித்தது. இந்த இரு அணிகளும் 6 மற்றும் 5 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளது. 


இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கிறதா..? 


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகள் தாங்கள் விளையாட இருக்கும் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 12 புள்ளிகளை எட்டும். மேலும், இந்த இரு அணிகளும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் முடிவுக்காக காத்திருக்கும். 


நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எஞ்சியிருக்கும் 3 ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியடைந்தாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு அரையிறுதிக்கான கதவுகள் திறக்கப்படும். மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டும். 


அதேசமயம் பாகிஸ்தான் அணி மற்றும் நெதர்லாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில் அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று, மற்ற அணிகளின் தோல்விக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். 


அரையிறுதி போட்டிகள் எப்போது..? 


2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி நவம்பர் 15 அன்று மும்பையில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.