ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போதே திட்டமிட்டு வருகின்றனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் உலகக் கோப்பை தகுதிக்கான சில புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நான்கு வருட ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் லீக் மூலம் எட்டு அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் என அறிவித்தது. 


ஏற்கனவே, 7 அணிகள் நேரடியாக தகுதிபெற்ற நிலையில், எட்டாவதாக தகுதிபெறும் அணி எது என்ற போட்டி நிலவியது. இந்தநிலையில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு தென்னாப்பிரிக்கா நேற்று தகுதிபெற்று 8வது அணியாக நுழைந்தது. 


தென்னாப்பிரிக்கா தகுதிபெற்றது எப்படி..? 


ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் லீக் மூலம் உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 8 அணிகள் இடம் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 21 போட்டிகளில் 9 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. அப்போது, உலகக் கோப்பைக்கான நேரடி தகுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் இருந்தனர். 


இந்தநேரத்தில், அயர்லாந்து மற்றும் வங்கதேசம் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தால் அயர்லாந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் தொடரின் முதல் போட்டி ரத்து செய்யப்பட்டதால் தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியில் கூட விளையாடாமல் உலக கோப்பையில் இடம் பிடித்தது.


உலகக் கோப்பை தொடரை நடத்துவதால் இந்திய அணி நேரடியாக தகுதிபெற்றது. இந்தியாவைத் தவிர, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன . 


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருநாள் உலகக் கோப்பை ஏற்கனவே வென்றிருந்த இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதிபெறவில்லை. இந்த இரண்டு அணிகளும் அடுத்த உலகக் கோப்பையில் விளையாட தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும்.


இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறும் இடங்கள்..? 


இந்தியாவில் இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்காக இந்தியாவில் உள்ள 12 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, தர்மஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை மைதானங்கள் உள்ளிட்ட 12 மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.