World Cup 2023 Points Table: உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி முன்பு எப்போதும் இல்லாத வகையில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சகமாக நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சில அணிகள் தடுமாறினாலும், சில அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு, பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியையும், ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா படுதோல்வி:
லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 311 ரன்களை குவித்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 177 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதேநேரம், ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியல் விவரம்:
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
தென்னாப்ரிக்கா | 2 | 2 | 0 | 4 |
நியூசிலாந்து | 2 | 2 | 0 | 4 |
இந்தியா | 2 | 2 | 0 | 4 |
பாகிஸ்தான் | 2 | 2 | 0 | 4 |
இங்கிலாந்து | 2 | 1 | 1 | 2 |
வங்கதேசம் | 2 | 1 | 1 | 2 |
இலங்கை | 2 | 0 | 2 | 0 |
நெதர்லாந்து | 2 | 0 | 2 | 0 |
ஆஸ்திரேலியா | 2 | 0 | 2 | 0 |
ஆப்கானிஸ்தான் | 2 | 0 | 2 | 0 |
வரலாறு காணாத தோல்வி:
நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அந்த அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் அதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும், முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வெற்றியை பறிகொடுத்து தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு வலுவாக இல்லாததே, அந்த அணியின் தொடர் தோவிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
அடுத்த போட்டி:
இதனிடையே, வரும் 16ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக தனது அடுத்த லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இன்று சென்னையில் நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய நியூசிலாந்து அணி தீவிரம் காட்டி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களை கருத்தில் கொண்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி முடிந்து வீடு திரும்பும்போது போட்டிக்கான டிக்கெட்டை காட்டி ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.