ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.  இந்த போட்டியின் அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இதற்கான வரைவு அட்டவணை வெளியாகியுள்ளது. 


இதற்கிடையில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளுக்கான மைதானத்தை மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. வெளியிடப்பட்ட வரைவு அட்டவணையின்படி, பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவிலும் விளையாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பிசிபி ஆய்வாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போட்டிகளில் ஒன்றையொன்று மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.


சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. அங்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடினால் தோல்வியுற்றுவிடுவோமோ என்று அஞ்சுகிறது. காரணம், ஆப்கானிஸ்தானில் ரஷித் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் உள்ளார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரும் அணியில் உள்ளனர். இவர்கள் சுழலால் பாகிஸ்தான் அணி வீழ்ந்துவிடுமோ என்று அஞ்சப்படுகிறது. இதனால், மைதானத்தை மாற்றுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் வாரியத்தின் சில அதிகாரிகள், அவர்கள் விளையாடுவதில் சிரமம் உள்ள பாகிஸ்தானின் போட்டிகளை இந்தியா வேண்டுமென்றே திட்டமிட்டுள்ளதாக கூறி வருகின்றனர். (ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காரணம் இன்னதென்று தெரியவில்லை)


இந்தியா - பாகிஸ்தான் போட்டி எங்கே..? 


வருமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த ஐசிசி விரும்புகிறது. நரேந்திர மோடி ஸ்டேடியம் 100,000 திறன் கொண்டது. ஆனால், அதற்கும் பாகிஸ்தான் அணி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. 


இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடைபெறும் என 'இன்சைட் ஸ்போர்ட்ஸ்' தெரிவித்துள்ளது. இது தவிர பாகிஸ்தான் அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் விளையாடவுள்ளது. மேலும், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், அந்த அணி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஸ்டேடியங்களை பாதுகாப்பானதாக கருதுகிறது. அதன் காரணமாகவே அங்கு மட்டுமே தங்களது போட்டிகளை நடத்த கோரிக்கை வைத்துள்ளது.