கிரிக்கெட் என்றாலே அதிரடிகளும், ஆர்ப்பரிப்புகளும் நிறைந்ததுதான். இன்றைய நவீன கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் அதிரடி காட்டுவது என்பது இயல்பான ஒன்றாகிவிட்டது. இன்றைய கிரிக்கெட் காலம் வரை எடுத்துக்கொண்டாலும் சில நிகழ்வுகள் மட்டும், சில கிரிக்கெட் சாகசங்கள் மட்டும் எப்போதும் ஆச்சரியங்களாக, அற்புதங்களாக, அதிசயங்களாக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் மின்னிக்கொண்டே இருக்கும்.


1983 உலககோப்பை:


அந்த வகையில், கிரிக்கெட் உலகின் டாப் 5 ஆச்சரியங்களில், அதிசயங்களில் ஒன்றாக எப்போதும் திகழ்வது கபில்தேவின் 175 ரன்கள். இன்றைய இந்திய அணி தன்னம்பிக்கை நிறைந்த அசாத்திய திறமைகள் கொண்ட அணி. ஆனால், 1983ம் ஆண்டு இங்கிலாந்திற்கு உலககோப்பை ஆடச்சென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி துளியளவும் நம்பிக்கையே இல்லாத இந்திய அணி கேப்டன் கபில்தேவ் தவிர.


1983ம் ஆண்டு உலககோப்பை தகுதிச்சுற்றில் டன்ப்ரிட்ஜ் வெல்சில் நடந்த போட்டியில் அப்போது இந்திய அணியை விட பலமிகுந்த அணியாக திகழ்ந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அன்றைய இந்திய அணியின் ராக்ஸ்டார் கவாஸ்கர் – ஸ்ரீகாந்த் ஜோடி டக் அவுட்டாகி வெளியேறினர்.


மிரட்டிய கபில்தேவ்:


முக்கிய ஆல் ரவுண்டர் அமர்நாத் 5 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த சந்தீப் பட்டீல் 1 ரன்னுக்கும், யஷ்பால் சர்மா 9 ரன்களுக்கும் அவுட்டாக 17 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையில், 50 ரன்களை இந்தியா கடக்குமா? என்ற கவலையில் இந்திய ரசிகர்கள் ஆழ்ந்த நிலையில் கபில்தேவ் களமிறங்கினார். அப்போது ரோஜர் பின்னியுடன் ஜோடி சேர்ந்த ஆடிய ஆட்டமே வித்தியாசமாக இருந்தது.


பவர்ப்ளே போன்ற பேட்ஸ்மேனுக்கு சாதகமான எந்தவித விதிகளும் இல்லாத அந்த காலகட்டத்தில் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். கபில்தேவ் மட்டையில் இருந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்க இந்திய ரசிகர்கள் மைதானத்தில் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். அவருக்கு ஒத்துழைப்பு தந்த பின்னி 22 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த ரவி சஸ்திரி 1 ரன்னில் அவுட்டானாலும் பின்னால் வந்த மதன்லாலை மறுமுனையில் வைத்துக்கொண்டு மீண்டும் அதிரடியை தொடர்ந்தார். அணியின் ஸ்கோர் 140 ரன்களை எட்டியபோது 8வது விக்கெட்டாக மதன்லால் 17 ரன்களில் வெளியேறினார்.


175 ரன்கள்:


இதற்கு மேல் இந்தியாவின் கதையை முடித்துவிடலாம் என்று நினைத்த ஜிம்பாப்வேவிற்கு கபில்தேவ் எந்த வாய்ப்பும் வழங்கவில்லை. சையத் கிர்மானியை மறுமுனையில் வைத்துக்கொண்டு ஜிம்பாப்வேயை துவம்சம் செய்தார்.


இந்திய அணி 100 ரன்களை கடக்குமா? என்று ஏளனமாக இருந்த ஜிம்பாப்வே வீரர்களுக்கு சவுக்கடி தரும் விதமாக கபில்தேவ் மிரட்டலான சதம் அடித்தார். சதம் அடித்த பிறகும் கபில்தேவின் ருத்ரதாண்டவம் நிற்கவில்லை. பந்துகள் எல்லைக்கோட்டிற்கு தொடர்ந்து செனறு கொண்டே இருந்தது. 60 ஓவராக நடந்த அந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி 60 ஓவர்களும் ஆடி 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது. 9வது விக்கெட்டிற்கு மட்டும் கிர்மானி – கபில்தேவ் ஜோடி 126 ரன்களை குவித்தது. தனி ஆளாக ருத்ரதாண்டவம் ஆடிய கபில்தேவ் 138 பந்துகளில் 16 பவுண்டரி 6 சிக்ஸருடன் 175 ரன்கள் விளாசினார். சையத் கிர்மானி 56 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்தார்.


அபார வெற்றி:


தொடர்ந்து இந்திய அணி நிர்ணயித்த 267 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்கள் ராபின் ப்ரவுன் – பேடர்சன் ஜோடி 44 ரன்களை எடுத்து பிரிந்தது. பேட்டர்சன் 23 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜேக் ஹெரான் 3 ரன்களும், ஆண்டி பைக்ராப்ட் 6 ரன்களுக்கும் அவுட்டானார். 103 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தபோது அந்த அணிக்காக களமிறங்கிய கெவின் கரண் பொறுப்புடன் ஆடினார். ஆனால், அவருக்கு மற்ற வீரர்கள் யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.


230 ரன்களை ஜிம்பாப்வே எட்டியபோது கெவின் கரண் 93 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் 9வது விக்கெட்டாக அவுட்டானார். கடைசியில் ஜிம்பாப்வே அணி 235 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்த போட்டியில் இந்திய 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மற்ற அணிகளை திரும்பி பார்க்க வைத்தது.


அந்த போட்டியில் கபில்தேவ் ஆடிய ருத்ரதாண்டவமே இந்திய அணியின் இன்றைய இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூண்டுகோல் ஆகும். அப்பேற்பட்ட மிரட்டல் அதிரடி சதத்தை கபில்தேவ் பதிவு செய்த நாள் இன்று.