உலகக் கோப்பை 2023ல் கடந்த அக்டோபர் 14ம் தேதி அகமதாபாத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, இந்த தோல்விக்கு பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வருகின்ற 20ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இந்தநிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியில் சில பேருக்கு உடல்நிலை சரியில்லை என செய்திகள் வெளிவந்துள்ளது. 


உடல்நிலை சரியில்லாத அப்துல்லா ஹபீக் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஹாஹீன் ஷா அப்ரிடி, சவுத் ஹகீல் மற்றும் ஜமான் கான் ஆகியோர் மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளனர். 


இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ கடந்த சில நாட்களில் சில வீரர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் அதிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். குணமடையும் நிலையில் உள்ளவர்கள் அணி மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளனர். “ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


நேற்று எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்தசூழலில் வருகின்ற வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி யாரை களமிறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 


பரிசோதனையின் முடிவில் பாகிஸ்தான் அணியில் எவருக்கும் டெங்கு நோய் கண்டறியப்படவில்லை. கேப்டன் பாபர் அசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


அகமதாபாத்தில் இந்தியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சென்றடைந்தது. கடந்த சில மாதங்களாக பெங்களூரில் பல வைரஸ் காய்ச்சல் பதிவாகியுள்ளன. மாறிவரும் வானிலை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்த்னர். இங்கு வந்த பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கும் உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டன. சில வீரர்கள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அதிலிருந்து மீண்டுள்ளனர். சில வீரர்கள் இன்னும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். 


தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, கடந்த அக்டோபர் 16ம் தேதி இலங்கைக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது. இலங்கை மற்றும் நெதர்லாந்திற்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் வென்ற பாகிஸ்தான், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. 






பெங்களூரு வந்த பிறகு தனியார் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி 


பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது வஸ்திம்.