2023 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. அதற்கு காரணம் நெதர்லாந்து அணியின் எழுச்சிதான். 2023 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியின் முதல் தோல்வி மற்றும் நெதர்லாந்து அணியின் முதல் வெற்றி இதுவாகும். 


தனது முதல் போட்டியில் இலங்கையும், பின்னர் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 246 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. நெதர்லாந்தின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஆல்-ரவுண்டர் ரோலோஃப் வான் டெர் மெர்வே. 


ஜொலித்த ரோலோஃப் வான் டெர்: 


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ரோலோஃப் வான் டெர், 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். அதன்பின் அவர் தனது பந்துவீச்சில் 9 ஓவர்களை வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். 


ரோலோஃப் வான் டெர் மெர்வே கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸுடன் அணியின் சிறந்த பார்ட்னர்ஷிப்பை    அமைத்தனர். எட்வர்ட்ஸ் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே இருவரும் டாப் கியரை உயர்த்தி 40 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தனர். வான் டெர் மெர்வே 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில் வான் டெர் மெர்வே 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்தார்.


மாறிய வாழ்க்கை: 


ரோலோஃப் இப்போது நெதர்லாந்துக்காக விளையாடுகிறார் என்றாலும், அவர் முதலில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்த ரோலோஃப், நார்தர்ன்ஸ் மற்றும் பின்னர் டைட்டன்ஸ் அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடினார். இடது கை சுழற்பந்து வீச்சாளராக இவர் சிறப்பாக செயல்பட்டாலும்,  தென்னாப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். தென்னாப்பிரிக்காவின் ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், பெரும்பாலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்காக ரோலோஃப் எவ்வளவு விளையாடுவார் என்ற சந்தேகம் எழுந்தது. 


 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று ரோலோஃப் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து, வாய்ப்பும் மறுக்கப்பட்டு வந்தது. 


இடம்பெயர்ந்த வான் டெர்: 


ரோல்ஃபின் தாயார் நெதர்லாந்தைச் சேர்ந்தவர். பெற்றோரில் ஒருவர் வேறு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், குழந்தை அந்த நாட்டின் பாஸ்போர்ட்டைப் பெறலாம். இந்த விதி ரோலோஃப் நெதர்லாந்திற்குள் நுழைவதற்கு வழிவகுத்தது. ரோலோஃப் போன்ற சர்வதேச அனுபவமுள்ள வீரர் அணியில் இருப்பது நெதர்லாந்துக்கு சாதகமாக அமைந்தது. ரோலோஃப் நெதர்லாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ஆனார். நெதர்லாந்துக்காக விளையாடும் போது, ​​ரோலோஃப் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இருபது20 லீக்குகளிலும் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவில் பிக் பாஷில் பிரிஸ்பேன் ஹிட், கரீபியன் பிரீமியர் லீக்கில் செயின்ட் லூசியா ஜோகாஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ், இங்கிலாந்தில் வெல்ஷ் ஃபயர், தென் ஆப்பிரிக்காவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் போன்ற பல அணிகளுக்காக விளையாடுகிறார்.


தென்னாப்பிரிக்கா அணிக்காக அவரது பங்கு:


38 வயதான ஆல்-ரவுண்டர் ரோலோஃப் வான் டெர் மெர்வே தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். அவர் 2009 இல் தென்னாப்பிரிக்காவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் மெர்வே தென்னாப்பிரிக்காவுக்காக 13 ஒருநாள் மற்றும் பல டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2015 ம் ஆண்டு நெதர்லாந்து பாஸ்போர்ட்டைப் பெற்றார். அதே ஆண்டில் நெதர்லாந்திற்காக அறிமுகமானார். இதுவரை 51 டி20 சர்வதேச போட்டிகளிலும், 19 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் விராட் கோலியுடன் ஆர்சிபி அணியிலும் விளையாடியுள்ளார்.