50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்க உள்ள நிலையில், இந்திய அணி சென்னையில் மோதும் போட்டி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்
நடப்பாண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஆண்டாக அமைந்துள்ளது. தங்களது நாட்டு அணிகள் பங்கேற்கும் சர்வதேச தொடர்கள் தவிர்த்து ஐபிஎல் போட்டிகள் களைக்கட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபரில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இப்படியான நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தயார்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 2011 ஆம் ஆண்டு உலக்கோப்பையை இந்திய அணி வென்றது. இதனைத் தொடந்து 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவும், 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணியும் வென்றது.
2015,2019 ஆம் ஆண்டு தொடர்களில் இந்திய அணி அரையிறுதி வரை தகுதிப் பெற்று தோல்வியை சந்தித்தது. இதனால் நடப்பாண்டு நடக்கும் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என பலரும் கணித்துள்ளனர். இப்படியான நிலையில் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
களைக்கட்டும் கிரிக்கெட் திருவிழா
அதன்படி அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, இந்தூர், தர்மசாலா, கவுகாத்தி, ராஜ்கோட், ராய்ப்பூர் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் முதல் மற்றும் ஃபைனல் போட்டிகள் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும். முதல் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
போட்டிகள் குறித்த அறிவிப்பு
மேலும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் என்றும், இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கும் என்றும், விரைவில் இதற்காக அதிகாரப்பூர்வ அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் தகுதிப் பெற்றுள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் உலகக் கோப்பை தகுதிக்கான சில புதிய விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடர் கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில், அனைவரது எதிர்பார்ப்பும் உலகக்கோப்பை தொடரை நோக்கி திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.