World Cup Super League Points Table: நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையேயான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற இருந்தது. ஆனால், மழை காரணமாக இந்த போட்டியானது ரத்து செய்யப்பட்டது. 


அதேநேரத்தில் இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக, ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை சூப்பர் லீக் புள்ளிகளில் இலங்கை அணி ஒரு புள்ளியை இழந்தது. இந்தநிலையில், எந்தெந்த அணிகள் எவ்வளவு புள்ளிகளுடன் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன என்ற பட்டியலை முழுமையாக பார்க்கலாம். 


நியூசிலாந்து அணி முதலிடம்: 


ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள் அட்டவணையில் நியூசிலாந்து அணி 165 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து அணி 24 போட்டிகளில் 155 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்திய அணி 21 போட்டிகளில் 139 புள்ளிகள் பெற்றுள்ளது. தொடர்ந்து, வங்கதேசம் 21 போட்டிகளில் 130 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் 21 போட்டிகளில் 130 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர். 


ஆஸ்திரேலியா எத்தனையாவது இடம்..? 


இந்த அட்டவணையில் ஆஸ்திரேலியா 18 போட்டிகளில் 120 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 15 போட்டிகளில் 115 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் எட்டாவது இடத்திலும், இலங்கை ஒன்பதாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா பத்தாம் இடத்திலும் உள்ளன. இந்த அணிகளுக்கு அடுத்த படியாக அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் உள்ளன. 


உலகக்கோப்பைக்கு தகுதிபெறுமா தென்னாப்பிரிக்கா..? 


உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள் அட்டவணையின்படி நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்று விட்டன. ஆனால், தென்னாப்பிரிக்கா அணியின் நிலைமை இன்னும் சந்தேகத்தில்தான் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 19 போட்டிகளில் 78 புள்ளிகளை மட்டுமே பெற்று 10வது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பைக்கு தென்னாப்பிரிக்க அணி இதுவரை நேரடியாக தகுதி பெறவில்லை. இருப்பினும், தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற அதிக வாய்ப்புகள் வரும் தொடர்கள் மூலம் இருக்கின்றன. 


இந்திய அணி: 


ரோஹித் சர்மா தலைமையிலான அணி உலகக் கோப்பைக்கு (உலகக் கோப்பை 2023) தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி 21 போட்டிகளில் விளையாடி 139 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2023 உலகக்கோப்பை தொடரானது இந்த முறை இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதன்படி, எந்த அணி தொடரை நடத்துகிறதோ அது நேரடியாக தகுதிபெறும். 


 2023 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடர் முழுவதும் இந்தியாவில் முழுவதுமாக நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வங்கதேசம், இலங்கை மற்றும் இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.