பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான அசம் கானை, ரசிகர் ஒருவர் உடலமைப்பை கொண்டு (பாடி ஷேமிங்) விமர்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல்:


ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுத்த பாகிஸ்தான் அணியின் முடிவு, அந்த அணிக்கே பாதகமாக மாறியுள்ளது. அதன்படி, முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த ஆப்கானிஸ்தன் அணி, இரண்டாவது போட்டியிலும் வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரை  2-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக டி-20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இது பாகிஸ்தான் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


வீரரை விமர்சித்த ரசிகர்:


இந்த தொடரில், ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் அசம் கானும் ஒருவர்.  இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதை கண்டு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், அவுட்டாகி தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த அசம் கானை கண்டு ஆவேசமாக உடல் அமைப்பு  (BODY SHAMING)அடிப்படையில் விமர்சித்து உள்ளார். முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில், அசம் கான் டக்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.






வீடியோவில் ரசிகர் சொன்னது என்ன?


தொடரை வெல்வது யார் என்பதை உறுதி செய்யும் இந்த போட்டியில் , அசம் கான் அவுட் ஆனதை கண்டு குறிப்பிட்ட ரசிகர் கடும் ஆவேசமடைந்துள்ளார். தொடர்ந்து அசம் கானை நோக்கி, கைகளை காட்டி அசைத்து நல்ல ஆஜானுபாகுவாக இருப்பதாகவும் , உண்பதற்குதான் சரிபட்டு வருவாய் என்பது போன்றும் சைகளை காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஆப்கானிஸ்தான் வெற்றி:


ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி  6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.