இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 


இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகளில் தயாராகும் வகையில் அனைத்து அணிகளுமே தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 


முன்னதாக, உலகக் கோப்பை 2023 போட்டிகளில் சில தேதிகள் மாற்றப்பட்டது. அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த போட்டிகளின் தேதிகள் நவராத்திரி காரணமாக மாற்றப்பட்டதாக பிசிசிஐ மற்றும் ஐசிசி அறிவித்தது. இப்போது ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டிகளின் தேதியும் விரைவில் மாற்றப்படலாம் என தெரிகிறது. 






அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் தொடர்ந்து இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பேசியுள்ளது. 


நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 9ம் தேதி ஹைரதராபாத்தில் நடைபெற உள்ளது. இதன்பின்னர், அக்டோபர் 10ம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கும் இடையேயான போட்டியை மாற்றப்பட வேண்டும் என கோரியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மனதில் வைத்து தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. 






தொடர்ந்து, இரண்டு போட்டிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஹைதராபாத் காவல்துறை கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் மூன்றாவது போட்டி அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும். அக்டோபர் 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. எனவே, இந்தப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தானும் கால அவகாசம் கோரியிருந்தது.


உலகக் கோப்பை 2023 போட்டியின் முதல் அரையிறுதி நவம்பர் 15 அன்று நடைபெறுகிறது. தொடர்ந்து, அரையிறுதி நவம்பர் 16ம் தேதி நடைபெறுகிறது. போட்டியின் இறுதிப் போட்டி வருகின்ற நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.