IND Vs AUS  ODI HEAD TO HEAD: அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா:


கடந்த மாதம் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கிய ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரண்டு அணிகளும் 150 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா அணி 83 போட்டிகளிலும், இந்திய அணி 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஆஸ்திரேலியா அணி 49 முறை முதலில் பேட்டிங் செய்தும், 34 முற சேஸிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், இந்திய அணி 33 முறை சேஸ்ங்கிலும், 24 முறை முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. 


உலகக் கோப்பையில் நேருக்கு நேர்:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ஆஸ்திரேலிய அணி 8 முறையும், இந்திய அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3 முறையும், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 7 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளன. 2003ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், 2015ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், நடப்பு உலகக் கோப்பை லீக் சுற்றில், ஆஸ்திரேலியாவை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


இந்தியா Vs ஆஸ்திரேலியா புள்ளி விவரங்கள்:



  • உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 352

  • உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 359

  • உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 125

  • உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 129

  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன் சேர்த்த இந்திய வீரர் (Current Player) - ரோகித் சர்மா (2332 ரன்கள்)

  • இந்திய அணிக்கு எதிராக அதிக ரன் சேர்த்த ஆஸ்திரேலிய வீரர் (Current Player) - ஸ்டீவ் ஸ்மித் (1306 ரன்கள்)

  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் (Current Player) - ஜடேஜா (37)

  • இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் (Current Player) - ஜாம்பா (34)

  • இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - ரோகித் சர்மா (209 ரன்கள்)