இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பரில் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டு 3-0 என்ற கணக்கில் வென்றது. 


தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்துக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அதன் அடிப்படையில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றிபெற்றுள்ளது. இந்த 4 போட்டிகளில் இந்திய அணி தற்போது வரை 16 வீரர்களை பயன்படுத்தியுள்ளது. இதில் 9 வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. 


எனவே, வரும் போட்டிகளில் அடிப்படையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய பிசிசிஐக்கு சவாலாக இருக்கும். 


அக்டோபர்- நவம்பரில் நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக 20 பேர் கொண்ட குழுவை உருவாக்கி அந்த வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த 4 ஆட்டங்களில் இதுவரை 16 வீரர்கள் முயற்சித்தும், 9 பேர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதனால் வாரியம் மற்றும் தேர்வாளர்கஇன் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 


ஷ்ரேயாஸ் ஐயர்:


கடந்த 2022 ம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக அனைத்து வடிவத்திலும் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ஆனால், இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. மேலும், காயம் காரணமாக நியூசிலாந்து ஹொடரில் இருந்து விலகியுள்ளார். 


சூர்யகுமார் யாதவ்:


டி20யில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். இந்த ஆண்டு இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் 18 என்ற சராசரியில் 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 31 ரன்கள்தான் அவரது சிறந்த ஸ்கோர். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விலகியதால் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சூழலில்தான் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 


ஹர்திக் பாண்டியா: 


ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக மட்டுமல்லாமல், ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை. ஆல்- ரவுண்டர் பாண்டியா 3 ஒருநாள் போட்டிகள் 2 விக்கெட்கள் வீழ்த்தி 78 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நேற்றைய நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் 7 ஓவர்கள் மட்டுமே வீசி 70 ரன்களை விட்டுகொடுத்தார். 


முகமது ஷமி:


வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு 4 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைத்தது. அவர் 4 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை மட்டுமே விட்டுகொடுத்தார். மறுபுறம், முகமது சிராஜ் 4 போட்டிகளில் சிறப்பாக செயல்படும்போது அதிகபட்சமாக 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 2 போட்டிகளில் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். 


அக்சர் படேல் - ஷர்துல் தாக்கூர்:


ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் முதல் ஷர்துல் தாக்கூர் வரை எதிர்பார்த்தபடி சிறப்பாக விளையாடவில்லை. அக்சர் படேல் 3 போட்டிகளில் 32 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. நியூசிலாந்து தொடரில் ஷர்துலுக்கு வாய்ப்பு கிடைத்தது.
2 விக்கெட்களை எடுத்தாலும், 8 ஓவர்கள் வீசி 50க்கு அதிகமான ரன்களை விட்டுகொடுத்தார். 


வாஷிங்டன் சுந்தர்:


வாஷிங்டன் சுந்தர் பொறுத்தவரை இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 12 ரன்கள் மட்டுமே இருந்தார். இன்னும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. யுஸ்வேந்திர் சாஹல் ஒரு போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், குல்தீப் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். 


கேஎல் ராகுல் - இஷான் கிஷன்:


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பராக களமிறங்கிய கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார். திருமணம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், இஷான் கிஷானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நேற்றைய போட்டியில் அவரால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, வரும் போட்டிகளில் இஷான் கிஷன் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். ம்பன் கில்லின் சிறப்பான ஆட்டத்தால், இஷான் கிஷன் இப்போது ஓப்பனிங் செய்வதற்கு பதிலாக மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.