புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹசிம் ஆம்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதை நேற்று சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேனாக இருந்த ஆம்லா கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதனை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டில் உள்ள சர்ரே கவுண்டி கிளப்பில் இணைந்து எதிரணிக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். 






கடந்த 2022 ம் ஆண்டு சர்ரே கவுண்டி சாம்பியன்ஷிப்பை வெல்வதில் ஆம்லா முக்கிய பங்கு வகித்தார். வலது கை பேட்ஸ்மேனான இவர் இதுவரை சர்வதேச போட்டிகளில் 57 சதங்கள் அடித்து 18,000 மேல் ரன்களையும் குவித்து ஓய்வு பெற்றார். 


இதுகுறித்து சர்ரே கவுண்டி வெளியிட்ட ட்வீட்டில், “ ஹசிம் ஆம்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்  . புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க பேட்டர் தனது விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அனைவரின் சார்பில், எல்லாவற்றிற்கு நன்றி ஹாஷ்” என்று பதிவிட்டு இருந்தது. 






ஓய்வு குறித்து ஹசிம் ஆம்லா பேசுகையில், “ ஓவல் மைதானத்தை பற்றி எனக்கு சிறந்த நினைவுகள் நிறைய இருக்கின்றன. இறுதியாக அதை ஒரு வீரராக விட்டு செல்வது ஒரு விதத்தில் கவலை அளித்தாலும், அதில் விளையாடி பெருமை அளிக்கிறது. சர்ரே கவுண்டி கிரிக்கெட்டின் இயக்குனர் அலெக் ஸ்டூவர்ட் மற்றும் ஒட்டுமொத்த சர்ரே ஊழியர்கள், வீரர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி. சர்ரே என்னும் கப்பலில் பல சர்வதேச வீரருடன் இணைந்து விளையாடியதே மரியாதைக்குரிய உணர்வாக இருக்கிறது.அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் மற்றும் இன்னும் பல கோப்பைகள் கிடைக்க வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 


சர்ரே கவுண்டி கிளப்பை தவிர டெர்பிஷயர், ஹாம்ப்ஷயர், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் எசெக்ஸ் அணிகளுக்காக ஆம்லா கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியுள்ளார். அதுபோக, உலகெங்கிலும் உள்ள லீக்குகளில் மற்ற டி20 அணிகளுக்காவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


ஆம்லா டெஸ்ட் வாழ்க்கை: 


ஆம்லா தென்னாப்பிரிக்காவுக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் 215 இன்னிங்ஸ்களில் 46.64 சராசரியில் 9,282 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு இரட்டை சதங்கள் உட்பட 28 சதங்களும் 41 அரை சதங்களும் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 311* ஆகும். இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்காக முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஆம்லா படைத்தார். ஜாக் காலிஸுக்கு (13,206) அடுத்து ஆப்பிரிக்க அணிக்காக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் இவர். ஆம்லா 2005 இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகமானார் மற்றும் பிப்ரவரி 2019 இல் இலங்கைக்கு எதிராக தனது கடைசி டெஸ்டில் விளையாடினார்.


ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்:


ஹசிம் ஆம்லா தென்னாப்பிரிக்காவுக்காக 181 ஒருநாள் போட்டிகளில் 178 இன்னிங்ஸ்களில் 49.46 சராசரியில் 8,113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 27 சதங்களும் 39 அரை சதங்களும் அடங்கும். காலிஸ் (11,550) மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் (9,427) ஆகியோருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் ஆவார். சதம் அடித்ததில் ஆம்லா முதலிடத்தில் உள்ளார். அவர் 44 டி20 போட்டிகளில் 33.60 சராசரியில் 1,277 ரன்கள் எடுத்தார். இதில் எட்டு அரைசதங்களும் அடங்கும்.


ஆம்லா பெயரில் பதிவான சாதனைகள்: 


ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000, 3,000, 4,000, 5,000 மற்றும் 6,000 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் ஆம்லா படைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டில், ஆம்லா தனது பெயரில் வேகமாக 7000 ரன்களை எடுத்தார். அதேபோல், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2017ல் இரண்டு சதங்கள் அடித்து அதிக ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் ஆனார்.