உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதும் நிலையில் இப்போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


கிரிக்கெட்டின் திருவிழாக்களில் ஒன்றாக 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான அணிகளும் கிட்டதட்ட முடிவாகி விட்ட நிலையில் இந்த வாரம் நடக்கும் ஆட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவரை 37 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கத்தை விட அனைத்து போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இப்போட்டி இந்த உலகக்கோப்பையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. 


ஆனாலும் 2025 ஆம் ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதும் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த போட்டி நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வங்கதேசம், இலங்கை அணிகள் இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.


ஆனால் அங்கு காற்று மாசுபாடு கடும் மோசமாக இருப்பதால் ஏற்கனவே இரு அணிகளின் பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் நிலவரத்தை ஐசிசி உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் சூழலுக்கு தக்கபடி நடுவர்கள் முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானால் நிலைமை சரியாகும் வரை ஆட்டத்தை நிறுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் எந்த அளவுக்கு காற்று மாசுபாடு ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.