விறுவிறுப்பாக ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (நவம்பர் 5) கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடி வெற்றி பெற்றது இந்திய அணி.


விராட் கோலி சதம்:


இதில் இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 24 பந்துகள் களத்தில் நின்று தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார்.


அதன்படி, 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 40 ரன்கள் குவித்தார். சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி, மற்றும் ஸ்ரேயாஸ் ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணிக்காக ரன்களை சேர்த்தனர்.






இதில் மொத்தம் 87 பந்துகள் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 77 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுபுறம் கடைசி வரை களத்தில் நின்ற விராட் கோலி 121 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 101 ரன்கள் குவித்தார்.  இச்சூழலில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது.


வாழ்த்திய சச்சின்:


இச்சூழலில்,  இன்று சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் சச்சின் என்ற சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.






இந்த நிலையில் தன்னுடைய சாதனை சமன் செய்யப்பட்டதற்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ’விராட் கோலி நீங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் எனக்கு 49 இருந்து 50 வயது ஆக 365 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள் 49 லிருந்து 50 வந்து என்னுடைய ரெக்கார்டை இன்னும் சில தினங்களிலே  முறியடிப்பீர்கள் என நான் நம்பிக்கை கொள்கிறேன். வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.


அதேபோல், இந்திய அணியின் முன்னாள் அதிர ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கும் கோலியை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’சச்சின் போன்ற மாபெரும் மனிதனின் அதிக ஒரு நாள் போட்டிக்கான சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்து இருக்கிறார்.


அதுவும் அவருடைய பிறந்தநாள் அன்று வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. விராட் கோலிக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த சதத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். 100 சதத்தை நோக்கி செல்லுங்கள் என்றும் இந்தியா மீது உள்ள காதலுடன்’ என்று கூறியுள்ளார்