உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் களம் கண்ட ஆப்கானிஸ்தான் அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


2023 ஆம் ஆண்டுக்கான 50வது ஓவர் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டிகள் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.  உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்றுள்ளது.


இதில் இன்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் தர்மசாலாவில் மோதின. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.  முன்னதாக அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு, வங்கதேசத்தை பழிதீர்க்க ஆப்கானிஸ்தான் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 


அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்  ரஹ்மானுல்லா குர்பாஸ் 44 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் மற்றும் அஸ்மதுல்லா உமர்சாய் தலா 22 ரன்களும், ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி அகியோர் தலா 18 ரன்களும் அதிகப்பட்சமாக எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். முதலில் பயங்கரமாக தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி பின்னர் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நிதானமாக விளையாடியதோடு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்த வண்ணம் இருந்தது.


இதனைத் தொடர்ந்து 37.2 ஓவர்களில் அந்த அணி 156 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. வங்கதேசம் அணி தரப்பில் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன், மெகிடி ஹசன் ஆகியோர் அதிகப்பட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி பேட்டிங் செய்யவுள்ளது. இப்போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.




 மேலும் படிக்க: Happy Birthday Zaheer Khan: ’நக்கிள் பால்’ கண்டுபிடித்த நாயகன்.. உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள்.. ஜாகீர் கானின் பிறந்தநாள் இன்று..!