இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற பல சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஜாகீர் கானும் ஒருவர். முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2000 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலியின் தலைமையில் அறிமுகமான ஜாகீர் கான், கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால், பொறியியல் படிப்பை கைவிட்டு கிரிக்கெட்டை தனது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தார். பொறியாளர்கள் பெரும்பாலும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்துவார்கள். அப்படிதான் ஜாஹீர் கானும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிதாக ஒன்றை கண்டறிந்து இந்த கிரிக்கெட்டில் உலகிற்கு தந்தார். அதுதான் 'நக்கிள் பால்'. இந்த ‘நக்கிள் பால்’ கண்டுபிடித்தவர் என்ற பெருமை முழுக்க முழுக்க ஜாகீர் கானையே சேரும். 


'நக்கிள் பால்' கண்டுப்பிடிப்பு: 


2004-05 ஆம் ஆண்டில், ஜாகீர் கானின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மோசமான பார்ம் காரணமாக விரட்டியது.  அப்போது அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நேரத்தில் அவர் இந்த பந்தை கண்டுபிடித்து தீவிரமாக பயிற்சி செய்தார். மீண்டும் அணிக்கு திரும்பிய போது, ​​மீண்டும் இந்த பந்தை பயன்படுத்தினார். அப்போது உலக கிரிக்கெட்டில் ஜாகீர் கானின் 'நக்கிள் பால்' மிகவும் பிரபலமானது. இன்றும் பந்துவீச்சாளர்கள் இந்த பந்தை பேட்ஸ்மேன்களை அவுட் செய்வதற்கும், திணறடிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.


இன்ஜினியர் டூ கிரிக்கெட் வீரர்:


மகாராஷ்டிர மாநிலம் ஸ்ரீராம்பூரில் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பிறந்த ஜாகீர் கான் கிரிக்கெட் வீரராக மாறிய கதை வேறு. ஜாஹீரின் ஆரம்பக் கல்வியானது ஹிந்த் சேவா மண்டல் நியூ மராத்தி ஆரம்பப் பள்ளி, ஸ்ரீராம்பூர். இதன் பிறகு கே.ஜே.சோமையா மேல்நிலைப் பள்ளியில் மேற்படிப்பு படித்தார். பிறகு இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். ஆனால் அவரது இதயமும் மனமும் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஜாஹீரின் ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை, நாட்டில் பல பொறியாளர்கள் இருக்கிறார்கள். நீ கிரிக்கெட்டில் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராக மாற வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினார். அவரது தந்தையின் இந்த சப்போர்ட்டால் இன்ஜினியர் டூ கிரிக்கெட் வீரராக பயணம் தொடங்கியது.


இன்று ஜாகீர் கான் 'சாக்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகீர் கான் தனது 17வது வயதில் மும்பைக்கு வந்த பிறகு தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். ஜிம்கானா கிளப்பிற்கு எதிரான ஆட்டத்தில் ஜாகீர் கான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரபலமடைந்தார். அப்போதைய MRF இன் பேஸ் அறக்கட்டளை TA சேகர், ஜாஹீர் கானைக் கவனித்தார். அவர் ஜாஹீர் கானின் திறமையை சென்னைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜாஹீர் தன்னைத் தயார்படுத்தி முதல்தர மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார்.


கிரிக்கெட் வாழ்க்கை: 






2011 உலகக் கோப்பையில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகக் கோப்பையில் ஜாகீர் கான் மொத்தம் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தனது சர்வதேச வாழ்க்கையில் மொத்தம் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும், 17 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.