சர்வதேச கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், உலகக்கோப்பையில் பங்கேற்பது போல ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் பங்கேற்று ஆடினர்.


உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ்:


இந்த தொடரில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடி வரும் இந்திய சாம்பியன்ஸ் அணியும், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் தங்களது அரையிறுதியில்  ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.


இதையடுத்து, பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியும், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்கள் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதலாம்.


இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்:


பொதுவாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எந்த விளையாட்டில் மோதிக் கொண்டாலுமே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் கிரிக்கெட் என்றால் சொல்லவே வேண்டாம். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் சீனியர் அணி தோற்றதுடன், அமெரிக்காவுடனும் தோற்று தொடரின் முதல் சுற்றிலே வெளியேறியது அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இந்தியாடும், பாகிஸ்தானும் மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


இந்த தொடரில் இரு அணிகளுமே பலமிகுந்த அணியாக உள்ளனர். யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியில் ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், இர்ஃபான் பதான், யுவராஜ் சிங் ஆகியோர் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் உத்தப்பா, யுவராஜ்சிங், யூசுப் பதான், இர்ஃபான் பதான் பேட்டிங்கில் மிரட்டியது போல இன்றும் மிரட்ட வேண்டியது அவசியம். இவர்களுடன் இணைந்து அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னாவும் அதிரடி காட்டினால் இந்திய அணி மிரட்டும்.


பேட்டிங், பவுலிங் பலம்:


யூனுஸ்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலமான அணியாகவே உள்ளது. கம்ரான் அக்மல், சோயிப் மாலிக், யூனிஸ்கான், அப்ரிடி, மிஸ்பா உல் ஹக் போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களுடன் ஷர்ஜில் கான், மக்சூத் அதிரடி காட்ட வேண்டியது அவசியம். இவர்கள் பேட்டிங்கில் ஜொலித்தால் இந்திய அணிக்கு நெருக்கடி காட்ட முடியும்.


பந்துவீச்சைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு ஆமீர்கான், சோகைல் தன்வீர், சோகைல் கான், ஷாகித் அப்ரீடி, வகாப் ரியாஸ், சோயிப் மாலிக் பலமாக உள்ளனர். இந்தியாவின் அதிரடியான பேட்டிங்கிற்கு எதிராக சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.


ரசிகர்கள் ஆர்வம்:


இந்திய பந்துவீச்சைப் பொறுத்தவரை ராகுல் சுக்லா, தவல் குல்கர்னி, வினய்குமார், பவன் நெகி, ஹர்பஜன்சிங், இர்பான் பதான் முக்கிய பலமாக உள்ளனர். இவர்கள் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் விதத்தில் பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். 2000-2010 காலகட்டத்தில் இந்திய – பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய வீரர்கள் மீண்டும் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்வது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.