Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதல்:


மகளிர் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. அதன்படிம், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், அந்த அணியால் எதிர்பார்த்தபடி அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் திணறியது.


பேட்டிங்கில் சொதப்பிய நியூசிலாந்து:


தொடக்க ஆட்டக்காரரான ஜார்ஜியா பிலிம்மர் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக மற்றொரு தொடக்க வீராங்கனையான சுசீ பேட்ஸ் 26 ரன்கள் சேர்த்தார். இவர்களை தொடர்ந்து வந்த மற்ற வீராங்கனைகள் அனைவருமே சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து, 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் டேண்ட்ரா டாட்டின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


சுழலில் அதகளம் செய்த நியூசிலாந்து:


எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூசிலாந்து அணி தனது சுழற்பந்துவீச்சால் கடும் சவால் அளித்தது. அதனை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் வீராங்கனைகள் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த டேண்ட்ரா டாட்டின் 22 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்களை சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, மேற்கிந்திய தீவுகளால் 120 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக, ஈடன் கார்சென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


நாளை இறுதிப்போட்டி:


தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுமே இதுவரை, ஒருமுறை கூட மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது இல்லை. எனவே, இந்த இரு அணிகளில் எது தனது முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஹாட் ஸ்டார் அலைவரிசையிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.