Women's T20 World Cup 2024: மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 7.30 மணிக்கு தொடங்குகிறது.


மகளிர் டி20 உலகக் கோப்பை 


ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை துபாயில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குரூப் ஏ-வில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில்,  இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. 


இந்தியா - இலங்கை மோதல்:


இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தாலும்,பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் ரன் ரேட் மிக மோசமாக இருப்பதால், இன்றைய போட்டியில் பிரமாண்ட வெற்றியை பெற தீவிரம் காட்டுகிறது. காரணம், தற்போதைய சூழலில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற, மீதமுள்ள ரண்டு போட்டிகளிலும் வெல்வதோடு, நல்ல ரன் ரேட்டையும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். மறுமுனையில் இலங்கை அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை கண்டுள்ளதால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப கவனம் செலுத்துகிறது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஹாட் ஸ்டார் அலைவரிசையிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


அணிகளின் நிலவரம் என்ன? 


இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் சொதப்பியதே, முதல் போட்டிக்கு தோல்வியாக அமைந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துல்லியமான பந்துவீச்சுடன், நல்ல பேட்டிங்கும் வெளிப்பட இந்திய அணி வெற்றியை வசப்படுத்தியது. ஷஃபாலி வர்மா மற்றும் கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ர்க்ஸ் ஆகியோரும் பேட்ட்ங்கில் பங்களிப்பை கொடுத்தால் இன்றைய போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இலங்கை அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது.


நேருக்கு நேர்:


சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 19 முறையும், இலங்கை அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.


பிட்ச் ரிப்போர்ட்:


மகளிர் டி20 உலகக் கோப்பையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதுவரை விளையாடிய முதல் நான்கு போட்டிகளில், சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சுமார் 121 ஆகும். இந்த நான்கு ஆட்டங்களில் மூன்றில் சேசிங் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் சேஸிங் அணிகள் துல்லியமான பந்துவீச்சு மற்றும் அதிரடியான பீல்டிங் மூலம் அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தப்படலாம். போட்டி செல்ல செல்ல பேட்டிங் எளிதாக இருக்காது, மேலும் இது அணிகளுக்கு ஸ்கோரைப் பாதுகாக்க உதவும். இருப்பினும், 130 ரன்களுக்கு மேல் சேர்ப்பது முதல் இலக்காக இருக்க வேண்டும். 


உத்தேச பிளேயிங் லெவன்:


இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேட்ச்), ரிச்சா கோஷ்(வி.கீ.,),  ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா, சஜீவன் சஜனா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ரேணுகா சிங்.


இலங்கை: விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கே), ஹர்ஷிதா மாதவி, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி (Wk), சுகந்திகா குமாரி, இனோஷி பிரியதர்ஷனி, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர.