ஹாங்காங் சிக்ஸ் தொடரில் இம்முறை இந்திய அணி பங்குபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த தொடர் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் மூன்றாம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹாங்காங் சிக்ஸ் தொடர்:


கடந்த 1993 ஆம் ஆண்டு ஹாங்காங் சிக்ஸ் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது.ஒரு அணியில் மொத்தம் ஆறு வீரர்கள் மட்டுமே விளையாடும் இந்தத் தொடர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டது. அதில் ஒரு போட்டியில் ஒவ்வொரு அணியில் உள்ள விக்கெட் கீப்பரை தவிர்த்து எஞ்சிய 5 வீரர்களும் 5 ஓவர்கள் வீச வேண்டும். அதுவே ஃபைனலாக இருந்தால் 8 பந்துகளை கொண்ட 5 ஓவர்கள் வீச வேண்டும். இந்த தொடரில் ஒய்ட் மற்றும் நோபால் 2 ரன்கள் கருதப்படும். அதே போல 31 ரன்களை தொட்டுவிட்டால் அந்த பேட்ஸ்மேன் ரிட்டையர்ட் நாட் அவுட்டாகி செல்ல வேண்டும்.


ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் ஃபைனலில் மோதும் என்ற வகையில் இத்தொடரின் ஃபார்மட் வித்தியாசமான விதிமுறைகளைக் கொண்டது. இம்முறை மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியாவும் விளையாட உள்ளதாக ஹாங்காங் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் இந்த தொடரில் இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோர் விளையாடி உள்ளனர். அதே போல உலக அளவில் பிரைன் லாரா, ஷேன் வார்னே பல ஜாம்பவான் வீரர்கள் தங்களுடைய நாட்டுக்காக விளையாடியுள்ளனர். அந்த வகையில் வரலாற்றில் இந்த தொடர் மொத்தம் 18 முறை நடந்துள்ளது.


வெற்றிகரமான அணிகள்:


இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெற்றிகரமான அணியாக விளங்கி இருக்கிறது. இந்த மூன்று அணிகளும் தலா ஐந்து முறை ஹாங்காங் சிக்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி ஒருமுறை சாம்பியன் பட்டமும் ஒரு முறை இறுதிப்போட்டி வரையும் வந்திருக்கிறது. இம்முறை இந்திய அணி திரும்புவதால் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.