மகளிர் பிரிமியர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த இறுதிப்போட்டியில் டெல்லி – பெங்களூர் அணிகள் மோதுகின்றன.


டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலே மேக் லேனிங்கை ரன் அவுட் செய்த கிடைத்த வாய்ப்பை பெங்களூர் அணி நழுவவிட்டது. இதையடுத்து, மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடினார். குறிப்பாக, ரேணுகா சிங் ஓவரை அடித்து ஆடினர். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ஷபாலி வர்மா பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். இதனால், டெல்லி 4.5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது.  தொடர்ந்து மெக் லேனிங் – ஷபாலி வர்மா தொடர்ந்து அதிரடி காட்டியதால் 6 ஓவர்களில் 61 ரன்களை டெல்லி எட்டியது.


பவர்ப்ளேவிற்கு பிறகு பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் ஸ்மிரிதி மாற்றத்தை கொண்டு வந்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. மொலினெக்ஸ் வீசிய  7வது ஓவரின் முதல் பந்திலே சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்ட ஷபாலி வர்மா கேட்ச் ஆனார். அவர் 27 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார். அவர் மொலினேக்ஸ் பந்தில் போல்டானார். அடுத்து வந்த கேப்ஸியும் முதல் பந்திலே போல்டானார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டமே தலைகீழாக மாறியது.


64 ரன்களுக்கு விக்கெட்டே இல்லாமல் இருந்த டெல்லி அதே 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், டெல்லி தடுமாறத் தொடங்கியது. மாரிஜேன் காப்புடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடிய 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி அணி தடுமாறத் தொடங்கியது. 13 ஓவர்களுக்கு 80 ரன்களை எடுத்திருந்த டெல்லி அணிக்காக அதிரடியாக ஆட முயற்சித்த மாரிஜேன் காப் 8 ரன்களில் ஆஷா ஷோபனா பந்தில் அவுட்டானார். அதே ஓவரில் மறுமுனையில் அதிரடி காட்ட முயற்சித்த ஜெஸ் ஜோனசனும் ஆஷா பந்தில் அவுட்டானார். 14 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை டெல்லி இழந்தது.


16 ஓவர்களை எட்டிய டெல்லி அணி 100 ரன்களை எட்டியது. டெல்லிக்காக அதிரடி காட்ட முயற்சித்த ராதா 12 ரன்களில் ரன் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஆர்.சி.பி. வீராங்கனைகள் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்கள். ஸ்ரேயங்கா வீசிய 19வது ஓவரில் கடைசி 2 விக்கெட்டுகளும் வீழ்ந்தது. 64 ரன்களுக்கு விக்கெட்டே இல்லாமல் இருந்த டெல்லி அணி 18.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.